“மீனாட்சி அருளமுதம்” எனும் பாடல் இறுவட்டு வெளியீடு!

​கிளிநொச்சி, ஜெயந்திநகர் திருவருள்மிகு மீனாட்சி அம்பாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கைச் சிறப்பிக்கும் வண்ணம் ‘மீனாட்சி அருளமுதம்’ எனும் பாடல் இறுவட்டு வெளியீடானது கடந்த வெள்ளிக்கிழமை(17) ஆலய வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, இறுவட்டினை வெளியீடு செய்து வைத்ததுடன் முதற்பிரதியையும் வழங்கிவைத்தார்.

​மனோன்மணி ஆறுமுகம் குடும்பத்தின் தயாரிப்பில், பத்மயன் சிவா அவர்களின் இசையமைப்பில், அன்பினிய பிரியன் அவர்களது வரிகளில், சிவஸ்ரீ ஜெயந்தன் குருக்களது அம்பாள் சுலோகத்துடன் உருவான பாடல்களை, விரிவுரையாளர் பத்மநாபன் சிவமைந்தன், வி. எம். மகாலிங்கம், கோகுலன் சாந்தன், கில்மிசா உதயசீலன், மைதுசா முரளிதரன், சங்கீர்த்தன் பிரபாகரன், சாந்தகுமார் கலைச்செல்வன் ஆகியோர் பாடியிருந்தனர்.

​ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு. அம்பிகைபாகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமிகு. சுப்பிரமணியம் முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் திருமிகு. தவசீலன் முகுந்தன், ஓய்வுநிலை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமிகு. அமரசிங்கம் கேதீஸ்வரன், கவிஞர் கலாகணேசன் மற்றும் அம்பாள் அடியவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்