எமது தமிழ்ச் சமூகத்தின் வேர்களும் வெளிச்சமுமாகத் திகழும் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் போதிக்காமல், சொந்த மண்ணின் வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் தாய்மொழிப் பற்றோடு எமது மண்ணின் உரிமைகளையும் பண்பாட்டையும் உணர்ந்து, தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக அடுத்த தலைமுறையினர் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என வல்வெட்டித்துறை, திருமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்.

சமூகத்திற்கு நல்வழி காட்டும் முன்மாதிரிகளாக இத்தளிர்களைச் செப்பனிடுவதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மையான கடமையாகும் என்றும்; நற்பண்பு, சுய ஒழுக்கம் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றுடன் வளர்க்கப்படும்போதே தமிழினத்தின் பெருமைமிக்க எதிர்காலம் உறுதிசெய்யப்படும் என்றும்; அதுவே நாளை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல்மிக்க எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் இவர்கள் உலகளவில் எந்தத் துறையில் தடம் பதித்தாலும் எமது மண்ணிற்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒப்பற்ற தூதுவர்களாகத் திகழ்வார்கள் என்றும் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை, மானாங்கானை திருமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வானது இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

திருமகள் சன சமூக நிலையத்தின் தலைவர் திரு. சிவகுருநாதன் செல்வானந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்களாக திரு. குணநாதன் சசிகலாத், திரு. பரஞ்சோதி சியாம்ராஜ், திருமதி. மகேந்திரன் குமுதினி, திருமதி. பிரசாந்த் விஜிதா, சிவதிரு. ஜெகதீஸ்வரன் கபில்ராஜ், திரு. கிட்டினன் சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
