நவ சனசமூக நிலையத்தின் நிலமும், புலமும் இணைந்து நடத்திய கலாநிதி சங்கரன் தங்கராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில், சேவை நலன் பாராட்டு விழா நாயகனின் வாழ்வியல் சிறப்பையும் சமூக சேவையையும் மதிப்பளிக்கும் விதமாக “தங்கத் தமிழ்” நூல் வெளியீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, வாழ்த்துரையினை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தனது உரையில்” யாழ்ப்பாண மண்ணின் பெயர் சொல்லும் பேரூர்களுள் ஒன்றான நவபுரம், கைதடியைத் தன் பூர்விகமாகக் கொண்டு தன் ஊரின் உயர்வுக்காக உழைக்கும் ஒருவராக, அந்த மண்சார் மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களில் நிறைந்திருக்கும் திருவாளர் சங்கரன் தங்கராசா அவர்களின் சமூகசேவையை மனங்கொண்டு அவ்வூர் மக்கள் அவருக்கென்றொரு விழா எடுப்பது மனநிறைவளிக்கிறது.

’மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கிணங்க மக்கள் சேவகன் என்கிற அடையாளத்தை தனதாக்கி அறுபது ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை தனது ஊரினதும், ஊர்சார் உறவுகளினதும் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்குமாக அயராதுழைக்கும் அவரது பணி போற்றுதற்குரியதே!
ஒரு எழுத்தாளராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பன்னெடுங்காலத் தொண்டனாக, மேடைப் பேச்சாளனாக, ஆன்மீகவாதியாக பல்வேறுபட்ட பரிமாணங்களில் படிப்படியான வளர்ச்சி கண்டு, தனது எழுபத்து மூன்று வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனையோடு அறம்சார் வழியில் இளைய சமூகத்தை அறிவூட்டும் பாங்கோடு உலாவருவதை இவரது ஆளுமையின் அடையாளங்கள் எனலாம்.
தனக்கென்று தானே வரித்துக்கொண்டதொரு ஆரோக்கியமான வாழ்க்கைப் பாதையில் மிக நீண்ட காலங்கள் கருத்தொன்றி சேவையாற்றி, பொன்சபாபதி ஆசிரியரால் பட்டை தீட்டப்பெற்ற சிறந்த மாணவனாக, ஆற்றல் மிக்க ஆளுமையாக நிமிர்ந்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக சிந்தனையில், செயலில், கலைகளில், ஒழுக்கத்தில் உயர்ந்த சமூகம ஒன்றை உருவாக்கிய பெருமைக்குரிய பெருமகனார் வாழும் காலமெல்லாம் இவ்வையம் அவரை வாழ்த்தும் வண்ணம் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.
இந்த மண்ணின் மீதும், மக்கள் மீதும், மொழியின் மீதும், தமிழின விடுதலையை தன் இயங்கு விதியாய் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மீதும் அளவற்ற பற்றுக் கொண்டு அரசியல், சமூக, அறப்பணி நிலையங்களின் உறுப்பினராகவும், உந்துசக்தியாகவும் இருந்து சிறந்த கல்விமானாக, தலைமைத்துவத்தின் அடையாளமாக, அன்பும், அறனும் தன் இதயத்தில் சுமந்த சமூக சேவகனாக, நல்லதொரு குடும்பத் தலைவனாக, தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை ஆழமாக நேசித்தவராக, தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்று வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உண்மையான தொண்டனாக நின்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சாவகச்சேரித் தொகுதிக்கிளைச் செயலாளராக விளங்குவதனோடு மக்கள் மனங்களில் நிலைபெற்ற ஒரு நல்மனிதனாக சகோதரன் தங்கராசா அவர்கள் பரிணமிக்கிறார்.
சமூக சேவைகள், அறப்பணிகள் என எல்லாவற்றிலும் தன்னை முழுதாய் அர்ப்பணித்து ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர்ந்த மனிதனாக ஒவ்வொருவர் உள்ளங்களிலும் தன் பணியால் உயர்ந்து நிற்கும் திருவாளர் சங்கரன் தங்கராசா அவர்களின் சமூகப்பணி தொடரவும், வருங்காலமெல்லாம் வளமானதாய் அமையவும் மனமுவந்து வாழ்த்தி நிற்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
கைதடி நவபுரம், நவசக்தி சமூக மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு வேலழகன் விமலன், நெடுந்தீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. சிவதுரை றஜிந்தன், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி புஸ்பராசா சிறீஸ்வரி, மக்கள் நலன் பேணும் நட்புறவுக் கழகத்தின் தலைவர், மக்கள் வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் திரு கணபதி சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.