”எதிர்காலத்தில் எமது சமுதாயத்தையும், இந்த மண்ணையும் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய துணிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட சிறந்த தலைவர்களாக நீங்கள் மிளிர வேண்டும். நேர்மையும் அநீதிக்கெதிரான தைரியமும் கொண்டு, எமது தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாகவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் நீங்கள் உயர வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சாரணத் தலைவர்களிடம் வலியுறுத்தினார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சாரணர் மாவட்டத்திலிருந்து, ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

”சாதனைகள் தானாக நிகழ்வதில்லை, அவை அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் ஒற்றுமையால் கட்டியெழுப்பப்படுகின்றன. சாரணர் இயக்கம் என்பது வெறும் சீருடையும் பயிற்சிகளும் மட்டுமல்ல; அது வாழ்வியல் பாடம். அது உங்களுக்குக் கற்றுக்கொடுத்த சேவை மனப்பான்மையும், கடின உழைப்பும் உங்கள் அடையாளத்தை மேலும் மிளிரச் செய்யும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. அதேவேளை, விருதுகளோடு உங்கள் பயணம் நின்றுவிடக் கூடாது. நமது மண்ணின் இந்த இளைய தலைவர்களாகிய நீங்கள் நாளைய சமூகத்தை வழிநடத்தும் வல்லமைமிக்க தலைவர்களாக உருவாகி எமது தமிழ்த் தேசிய இனத்தை வழிநடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனாதிபதி சாரணர் விருதினை வென்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இம்மதிப்பளிப்பு நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. அருளானந்தம் சிவனருள்ராஜா, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. பிரதீபா காயத்திரி கஜபதி, கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முதல்வரும், கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளருமான திரு சபரி பூலோகராஜா, கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் மேனாள் செயலாளரும், மேனாள் அதிபருமான திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம், கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் திரு. சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன், மாவட்ட உதவி ஆணையாளர்கள், சாரணிய மாணவத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
