இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், நேற்றைய தினம் செல்வாநகர் பகுதி இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று, அவர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.

இக்கலந்துரையாடலின் போது, இளைஞர்கள் தமது கிராமத்தின் எதிர்கால முன்னேற்றம், சமூகத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர். அதேவேளை, கிராமத்தின் தற்போதைய தேவைகள், நிலவும் குறைபாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் அவரின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனர்.

சமகாலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் உருவாகும் சமூகப் பாதிப்புகள், அதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போதைப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களை மீளச் சமூக நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிமுறைகள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், தமிழர் அரசியலின் எதிர்காலப் பாதை மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பின் அவசியம் குறித்தும் ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில், கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. தியாகராசா, செயற்பாட்டாளர் நிசாந்தன், செல்வாநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், கிராம இளைஞர் அணியினர் உள்ளிட்ட பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.