யாழ்ப்பாணம் தீவுப்பகுதி வீதிப் புனரமைப்பு குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதின்ம்(22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிமல் இரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வேலணைத் துறையிலிருந்து புங்குடுதீவு வரையான 4 கிலோமீட்டர் கடல்வழிக் கூட்டுப்பாதை (Causeway) உள்ளிட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என அமைச்சர் பிமல் இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எழுப்பிய வாய்மொழி மூல வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த உறுதியை வழங்கினார்.
நாடாளுமன்றில் கேள்விகளை எழுப்பிய எம்பி சிறீதரன், தீவுப்பகுதி மக்களின் போக்குவரத்துச் சிரமங்களை சுட்டிக்காட்டினார்.
“வேலணையில் இருந்து புங்குடுதீவு வரையான 4 கி.மீ பாதை, நெடுந்தீவு, நைனாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதி மக்கள் அனைவருக்குமான முக்கிய பாதையாகும். அராலியில் இருந்து நேரடியாக இந்தப் பாதையை அமைப்பதற்காக High Impact Projects திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதுள்ள பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தப் பணி திட்டமிட்டபடி 2027-ஆம் ஆண்டில் நிறைவுக்கு வருமா?”
இதற்குப் பதிலளித்த அமைச்சர், “குறிப்பிட்ட திட்டப் பணிகளை 2027-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்யவே எமது அமைச்சு எதிர்பார்க்கிறது” என உறுதியளித்தார்.
தொடர்ந்து தனது இரண்டாவது கேள்வியை முன்வைத்த எம்பி சிறீதரன், வழுக்கியாறு – அராலி – வேலணை – புங்குடுதீவு – குறிகட்டுவான் வரையான பாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வேலணை, புங்குடுதீவு, நைனாதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்றுறையின் சில பகுதிகள், அனலைதீவு மற்றும் எழுவைதீவு வாழ் மக்கள் பயன்படுத்தும் முதன்மைப் பாதையாக இது அமைகிறது.
நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் உள்ள இந்த முழுமையான பாதைக்கு அமைச்சினால் ஏதேனும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?
இரண்டாவது கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட வீதி அபிவிருத்தி நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.
வட மாகாணம் மற்றும் யாழ்ப்பாணப் பகுதியில் A மற்றும் B தர முதன்மை வீதிகள் மற்றும் கிராமிய வீதிகளைப் புனரமைக்க பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்றுக்கொண்ட நிறுவனங்கள் சுமார் 13 திட்டப் பணிகளை குறித்த காலத்தில் முடிக்காமல் தாமதித்து வருகின்றன.
“இது யுத்தத்தினால் ஏற்பட்ட தாமதம் அல்ல; ஒப்பந்தக்காரர்களின் செயல்திறன் இன்மையால் ஏற்பட்ட சிக்கலாகும்” என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.