இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய மிக முக்கியமாக, செம்மணியிலே நடைபெறுகின்ற மனித அவலங்கள் தொடர்பிலும், செம்மணியிலே மனித புதைகுழிகள் தோண்டப்பட்டு இன்றோடு அந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும், அவை தொடர்பான விடயங்களை இந்தச் சபையிலே கொண்டுவர வேண்டிய ஒரு சூழ்நிலையை நான் இந்த இடத்திலே பதிவு செய்துகொள்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (21) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிக முக்கியமாக, யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இதுவரை காலமும் செய்யப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், அங்கே கண்டெடுக்கப்பட்ட 584 வரையிலான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படுமா, இல்லையா என்பது இந்த அரசாங்கத்தினால் இன்னும் உறுதியாகக் கூறப்படவில்லை. காரணம், இது ஒரு இழுபறி நிலையிலேயே சொல்லப்படுகின்றது.
அரசாங்கத்திடம் இருக்கின்ற நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம், அதற்கான பண உதவிகளை செய்வதற்கோ அல்லது அவற்றை முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கோ அரசாங்கம் இன்னும் ஒரு முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதைத்தான் அண்மைய நாட்களின் விடயங்கள் முன்வைக்கின்றன.
நான் நினைக்கிறேன், இந்த உயர்ந்த சபையிலே இதற்கு முதலும் பல தடவைகள் இவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தினால் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற, குறிப்பாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தைக் கையிலே எடுத்திருந்தது. அவர்கள் இது தொடர்பாக ஏற்கனவே 2003 ஆம் ஆண்டளவிலே ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக, 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே “Report of the Committee on Disappearances in the Jaffna Region of the Human Rights Commission of Sri Lanka” இவர்களால் இந்த ஆய்வு நிலைமைகள் மேற்கொள்ளப்பட்டன. இதிலே ஒரு குழு அமைக்கப்பட்டது.
அன்றைய நேரத்தில் இருந்த முன்னாள் அரசாங்க அதிபர் டாக்டர் தேவநேசன் நேசையா தலைவராகவும், கே.எச். கமிலஸ் பெர்னாண்டோ, ஜெசிமா இஸ்மாயில், எம்.சி.எம். இக்பால் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்து, 1995–1998 காலகட்டங்களில் யாழ்ப்பாண மண்ணிலே மேற்கொள்ளப்பட்ட 327 முறைப்பாடுகளை ஆய்வு செய்து, காணாமல் ஆக்கப்பட்ட 281-க்கும் மேற்பட்டோரின் விவரங்களைச் செம்மணியோடு தொடர்புபடுத்தி அறிக்கையாகக் கொண்டு வந்திருந்தார்கள். அந்த அறிக்கை இப்போதும் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாக நடைபெற்ற செம்மணியினுடைய ஆய்வுகளின்படி, 584-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதேநேரம், அதற்கு அப்பால் 57-க்கும் மேற்பட்ட குவியல்களாக எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் உண்டு. கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்டோரின் மரணங்களை மையமாக வைத்து இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் கூட, அவை இதுவரை வெளியிலே கொண்டுவரப்படவில்லை.
இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுக்கான ஆய்வுகள் நீதிமன்றக் கட்டளையோடு மூன்றாவது கட்டமாக நிறைவு பெற்றிருக்கின்றன. கடந்த 19 ஆம் திகதியோடு 110 நாட்கள் நடைபெற்ற ஆய்வுப் பணிகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன.
வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி, களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களிடம் அங்கே எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கையைத் தருமாறு கேட்டிருக்கிறார்கள். வரும் அக்டோபர் 14 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்படவும் இருக்கிறது. முதலாவது கட்டமாக 9 நாட்களும், இரண்டாவது கட்டமாக 45 நாட்களும், மூன்றாவது கட்டமாக 56 நாட்களுமாக மொத்தம் 110 நாட்கள் செம்மணியிலே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எலும்புக்கூடுகள் தவிர்ந்த பிற சான்றுப் பொருட்களாக 170 பொருட்கள் அங்கே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்திற்குச் சென்று பார்ப்பதற்கு அண்மையிலே ஐரோப்பிய யூனியனுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், போன வாரம் கனடாவினுடைய தூதுவரும் குழுவினரும் சென்று அதனைப் பார்வையிடுவதற்கு அரசாங்கம் மறுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாடு பார்ப்பதற்கு அனுமதி கேட்டபொழுதும், அது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சினால் தடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், ராஜதந்திரிகள் இதைப் பார்வையிடுவதை அரசாங்கம் ஏன் தடுக்கிறது என்பது எங்களுக்குச் சந்தேகத்தைத் தருகிறது.
இந்த 583 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளைத் தவிர, செம்மணி சிந்துப்பாத்தியின் மதில் பிரதேசத்திற்கு உட்பட்ட மற்றும் மதிலைத் தாண்டிய வெளிப்பகுதிகளிலும் மனிதர்கள் அடித்துக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள் என்று, இப்போது சிறையில் இருக்கின்ற இராணுவக் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவருடைய சாட்சியங்களைப் பதிவு செய்து, அவரை அங்கே அழைத்துச் சென்று அந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்யத் தயங்குகிறது.
இங்கே ஒரு பெரிய மனித பேரவலம் நடந்திருக்கிறது. மனிதர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்துக்களின் மரபுப்படி உடல்களை அடக்கம் செய்யும்போது உடுப்புகளுடனும், தலை தெற்கு திசை நோக்கியும் வைப்பது வழக்கம். ஆனால், நான் நீதிமன்றக் கட்டளையின்படி இரண்டு தடவைகள் செம்மணிக்குச் சென்று பார்த்தபொழுது, வடக்கிலோ, கிழக்கிலோ, மேற்கிலோ எனப் பல திசைகளில் கும்பல் கும்பலாக மனிதர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், அங்கே கண்டெடுக்கப்பட்ட குவியல்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவை 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுடையவை! இந்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு என்ன நடந்தது கௌரவ உறுப்பினர்களே? அவர்கள் இந்த நாட்டிலே யுத்தம் செய்தார்களா? ஆயுதம் தூக்கினார்களா? ஏன் அவர்களை இவ்வாறு அடித்து நொறுக்கி எலும்புத் துண்டங்களாகப் புதைத்திருக்கிறார்கள்?
இது செம்மணியில் மட்டுமல்ல; கொக்குளாய், மன்னார் சதொச கட்டடப் பகுதி, மன்னார் திருக்கேதீஸ்வரம், கிளிநொச்சி கணேசபுரம் போன்ற இடங்களிலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கொக்குளாயில் கண்டெடுக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளில், மண்டையோடுகளின் வாய்கள் திறந்தபடியே (ஆவென்றபடியே) புதைக்கப்பட்டிருந்த படங்கள் வெளிவந்ததை அனைவரும் அறிவர். மனித உடல் உணர்வோடு, உயிருடன் அல்லது குற்றுயிராகத் துடிக்கத் துடிக்கத் தாக்கப்படும்போதுதான் வாய் திறந்த நிலையில் இருக்கும். அந்த நிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கான சரியான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. இதற்கான நிதியை அரசாங்கம் ஏன் வழங்குவதற்குத் தயங்குகிறது என்று எனக்கு விளங்கும் வரை இல்லை. அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றால், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது மனித உரிமை அமைப்புகளிடம் நிதியைக் கோர வேண்டும்.
அரசாங்கத்திற்கு அது கடினமாக இருந்தால், இந்த உயர்ந்த சபையின் ஊடாக உலக நாடுகளிடமும், சர்வதேச சமூகத்திடமும் நான் மிக வினையமாகக் கோரிக்கை வைக்கின்றேன்: இந்த மனித எலும்புக்கூடுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, அங்கே நடந்தது என்ன என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இதில் அக்கறை காட்டுகின்றன.
தேவநேசன் நேசையா தலைமையிலான குழு 2003 அக்டோபர் 28 அன்று அளித்த அறிக்கையையும், மனித உரிமைகள் ஆணைக்குழு சோமரத்ன ராஜபக்ஷ, லெப்டினன்ட் கடுகல்ல, கெப்டன் லலித் வைவா உட்பட 19 இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்த அறிக்கைகளையும் நான் இந்தச் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்.
சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்க சமர்ப்பித்த கடிதத்திலும், கோயிலுக்கு முன்னால் உள்ள வயல்வெளிகளில் இன்னும் பல இடங்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று சோமரத்ன ராஜபக்ஷ எழுதியிருக்கிறார். அரசாங்கம் அவரை அங்கு அழைத்துச் சென்று, உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
அங்கே மழை, வெயில் பாராது பணியாற்றிய யாழ்ப்பாண மாவட்ட நீதிபதிகள், துறைசார் நிபுணர்கள், பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் சேவையை நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
இறுதியாக, அமெரிக்காவின் C-14 கார்பன் டேட்டிங் (Carbon Dating) பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்பும்போது, வெறும் 3 அல்லது 4 மாதிரிகளை மட்டும் அனுப்பினால் உண்மை வெளிவராது. கண்டெடுக்கப்பட்ட 583 எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் குறைந்தது 100 மாதிரிகளாவது அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதேபோல, 20 ஆண்டுகளுக்கு முன்பு அல்லப்பிட்டியில் பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம் பிரவுன் அடிகளாருக்கு நீதி கோரி கத்தோலிக்கத் தந்தையர்களும் துறவிகளும் நேற்று நடத்திய போராட்டத்தின் அறிக்கையையும் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்.
தொடர்ந்தும் இந்த மரணங்களுக்கும், மனித எலும்புக்கூடுகளுக்கும் நீதி கிடைக்க அரசாங்கம் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினையமாக வலியுறுத்தி விடைபெறுகிறேன்.