நமது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழினத்தை நிலைநிறுத்தி, வழிநடத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களாக உருவாகவேண்டும் என மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வலியுறுத்தினார்.

கிளி/ புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

”ஒரு தலைவனுக்கு மிக முக்கியத் தேவை ஒழுக்கமும் நேர்மையும் என்பதை மறந்துவிடாதீர்கள், அப்படிப்பட்ட தலைவனால் கட்டமைக்கப்பட்ட இனம் நாங்கள். உங்களுடைய எதிர்காலத்தை ஒரு முன்மாதிரியானதாக மாற்ற, இன்றிலிருந்தே உங்கள் நடத்தையிலும், சிந்தனையிலும், செயற்பாட்டிலும் நேர்மையையும் அறத்தையும் கடைப்பிடியுங்கள். நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தால் மட்டுமே உலகை நிமிர்ந்து பார்க்க முடியும்.

நீங்கள் அறிவியல் தளத்திலும், சர்வதேச அரசியல் தளத்திலும் பெரும் ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும். நமது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சர்வதேச அரங்குகளில் தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் போராடக்கூடிய ஆற்றலை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழர்களின் அளப்பரிய வலிகளையும், தியாகங்களையும், நமது வீரம் செறிந்த வரலாற்றையும் நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நமது நேற்றைய கண்ணீரும் தியாகமும் தான், உங்கள் நாளைய வெற்றிக்கு அடித்தளம். அந்த வலிகளை உங்களது பலமாக மாற்றி, இந்த உலகிற்கு நம் இனத்தின் பெருமையை பறைசாற்றும் பேராளுமைகளாக நீங்கள் வலம் வர வேண்டும்.

இளைய தலைமுறையினராகிய உங்கள் கைகளில்தான் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சுயநலமற்று, இனத்தின் மீது தீராத பற்றுக் கொண்டு, நேர்மையான பாதையில் தலைமைத்துவப் பண்புகளோடு நீங்கள் நடைபோட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிர்மலவசந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி தெற்கு கல்வி வலையத்தின் சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமிகு. துரைராசா ஜீவாநந்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலய ஆசிரியர் திருமதி. ஆனந்தி இளந்திவாகர் அவர்களும் கலந்துகொண்டனர்.