கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை என்பது காலங்காலமாக தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய சொந்த இடமாக, தாங்கள் அந்த இடங்களிலே கால்நடைகளை வளர்த்து பயன்களை பெற்று வந்தார்கள்.

அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் அந்த பகுதியிலே அத்துமீறி சோளச் செய்கை, பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அவர்களுடைய மாடுகள் கொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இப்பொழுது கடந்த 6–7 ஆண்டுகளாக இந்த உயர்ந்த சபையிலே பல தடவைகள் முன்வைக்கப்படுகிற பொழுதும், மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பிலே இந்த அரசாங்கமும் ஒரு தெளிவான முடிவை இதுவரை எடுக்கவில்லை என்பது மிகவும் துர்பாக்கியமானது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆகவே அரசாங்கத்திடம் நாங்கள் இந்த முறையும் ஒரு கேள்வியைக் கேட்கிறோம்: நீங்கள் சட்டமூலங்களைக் கொண்டு வருகிறீர்கள் — விலங்குகள் தொடர்பான சட்டமூலம். அந்தச் சட்டமூலத்திலே இந்த மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையை ஏன் அந்த மேய்ச்சல் உரிமையாளரிடம் கையளித்து, அவர்களுடைய கால்நடைகள் வளர்வதற்கான வசதியை அரசாங்கம் செய்து கொடுக்க மறுக்கிறது? அது அரசாங்கத்தினுடைய மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்த செயல். அதனை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது. இந்த அரசாங்கமும் அதனையேதான் செய்து வருகிறது.
அதேபோல்தான் இன்று யாழ்ப்பாண மண்ணிலே தொடர்ச்சியாக நீங்கள் பார்க்கலாம் — மயிலிட்டி, பலாலி, வசாவிலான் போன்ற பிரதேசங்களிலே மக்கள் தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடுகிறார்கள். இதனை விட, கடந்த 14 ஆம் தேதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளரால், விமான நிலைய காணி சுவீகரிப்புக்கென கொஞ்சம் மக்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த மக்களைச் சென்றடைந்து, அங்கு பேசியிருந்தார்கள். அந்த மக்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லியிருந்தார்கள்: “எங்களுக்கு நிலம்தான் வேண்டுமே தவிர, எங்களுடைய காணிகளை சுவீகரிக்க விட முடியாது” என்பதை சொல்லியிருந்தார்கள்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி ஒரு வெள்ளிக்கிழமை — மயிலிட்டி, வசாவிலான், பலாலி, தோலக்கட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த மக்கள் சமைத்த உணவைக் கூட சாப்பிட முடியாமல், இராணுவத்தால் கலைக்கப்பட்டார்கள். கலைக்கப்பட்டது மட்டுமல்ல, அந்த இடங்களை வலுக்கட்டாயமாக இராணுவத்தினர் பறித்திருந்தார்கள்.
இன்று அந்த இடங்களிலே இராணுவத்தினர் தோட்டம் செய்கின்றார்கள். அவர்கள் மரக்கறிகளை வெளியிலே மக்களுக்கு விற்கிறார்கள். அந்த மக்களுடைய தென்னைகளிலிருந்து தேங்காய்களைப் பறிக்கிறார்கள். அவர்களுடைய கண்ணுக்கு முன்னாலேயே அவர்கள் அதனை விற்பனை செய்கிறார்கள்.
அண்மையிலே கௌரவ உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் கூட ஒரு சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய செய்தியிலே சொல்லியிருந்தார்: “அந்த மக்களுடைய காணிகள் யுத்தம் இல்லாத நேரத்தில் ஏன் நீங்கள் அதனை வைத்திருக்கிறீர்கள்? ஏன் அந்த மக்களிடம் அவற்றை வழங்குவதில் உங்களுக்கு என்ன தடங்கள்?”
இப்பொழுது யுத்தம் இல்லை. ஆயுதங்களோடு யாருமில்லை. ஒரு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே 16 கிராம அலுவலர் பிரிவுகளில் முழுமையாக 3 கிராம அலுவலர் பிரிவுகள் இப்பொழுது இராணுவத்தினுடைய முகாம்களாக வைத்திருக்கிறார்கள். அது முகாம் அல்ல; அவர்கள் அங்கே விவசாயம் செய்கிறார்கள், சலூன் கடைகள் வைத்திருக்கிறார்கள், சாப்பாட்டுக் கடைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை அந்த மக்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
ஜனாதிபதி வந்து பலாலியிலே நடந்தபொழுது சொன்னார்: “உங்களது காணி உங்களுக்குதான், நாங்கள் உங்களிடம் அந்த காணிகளை விடுவிப்போம்” என்று.
அண்மையிலே இந்த பலாலி விமான நிலையத்திற்கான காணிகள் சுவீகரிப்பு தொடர்பிலே, கடந்த 2026/07/27 ஆம் திகதி நான் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தேன். அதில் நான் மிக முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தேன்:
விமான நிலைய விரிவாக்கத்திற்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ள துல்லியமான எல்லைகள் மற்றும் வரையறைகள் எவை என்பது அறிவிக்கப்படவில்லை.
எந்தெந்த கிராம அலுவலர் பிரிவுகளில் மொத்தமாக எத்தனை ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் எந்தவித தெளிவான தகவலும் வழங்கப்படவில்லை.
சுவீகரிக்கப்படவுள்ள காணிகளுக்கான நட்டீடு வழங்கும் முறை, அதன் மதிப்பீட்டு அடிப்படை மற்றும் வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை தொடர்பில் எவ்வித விளக்கமும் குறிப்பிடப்படவில்லை.
விமான நிலைய அபிவிருத்தி என்ற நோக்கத்திற்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள், பின்னர் இராணுவத்தின் விவசாய அல்லது பிற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் காணி உரிமையாளர்கள் மத்தியில் பரவலாக நிலவுகின்றது. இச்சந்தேகத்தை நீக்கும் வகையில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
சுவீகரிக்கப்படும் காணிகளுக்கான நட்டீடு எந்தக் காலவரையறைக்குள் வழங்கப்படும் என்பது தொடர்பிலும் உறுதியான அறிவிப்போ நடைமுறையோ இதுவரை வெளியிடப்படாத நிலையில், மக்கள் தமது எதிர்கால வாழ்வாதாரம் குறித்து கடும் கவலை அடைகின்றனர்.
அதனால் இந்த சுவீகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துங்கள் என்று நான் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கேப்பாப்புலவு காணிகள் — இங்கே கௌரவ உறுப்பினர் ரவிகரன் அவர்கள் இருக்கிறார், பல தடவைகள் இந்த உயர்ந்த சபையிலே அவர் இந்த காணி தொடர்பாகத் தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அந்த மக்கள் கடந்த கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகத் தங்களுடைய சொந்த நிலத்திற்குப் போவதற்காகப் போராடுகிறார்கள்.
அவர்கள் 2026/06/04 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்கள். அவர்களிலே 48 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை நான் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அந்த மக்களுக்கு இன்னும் ஜனாதிபதியிடமிருந்து சரியான பதிலை அரசாங்கம் கொடுக்கவில்லை. அது தொடர்பிலே நானும் கூட 2026/07/28 ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி, அதனோடு பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் 62 பேருடைய பெயர் விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறேன்.
தயவுசெய்து அந்த மக்களுடைய காணிகளை வழங்குங்கள். யுத்தம் இல்லாத நாட்டில், நேற்றுமுன்தினம் இந்த சபையிலே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர அவர்கள் சொல்லுகிறார் — “காணிகளை நாங்கள் கொடுக்க மாட்டோம், காணிகள் பாதுகாப்புக்கு அவசியமானது” என்று.
எங்கே யுத்தம் நடக்கிறது? இந்த நாட்டில் யுத்தம் முடிந்து எல்லாம் சுமுகமானது என்று உலகம் முழுக்கச் சொல்லுகிறீர்கள், உலக நாடுகளுக்குச் சொல்லுகிறீர்கள். எந்த யுத்தமும் இந்த நாட்டில் இல்லை என்று சொல்லும்போது, அந்த மக்களின் காணிகளை ஏன் வழங்கத் தயங்குகிறீர்கள்?
யுத்தம் இல்லாத நாட்டில் எதற்கு உங்களுக்கு மக்களுடைய காணிகள்? அதிலும் இந்த அளவு தூரம் — கிட்டத்தட்ட 3000 ஏக்கர் காணிகள் வலிகாமம் வடக்கிலும், கேப்பாப்புலவில் இருக்கிற மக்களுடைய 200 ஏக்கர் வரையான காணிகளையும் ஏன் பறித்து வைத்திருக்கிறீர்கள்?
அந்த மக்கள் பரம்பரையாக, காலாகாலமாக, வரலாற்று ரீதியாக வாழ்ந்த மண்ணை நீங்கள் பறித்திருக்கிறீர்கள். ஏன் கொழும்பிலேயோ அல்லது கண்டி, மாத்தறையிலயோ அல்லது அம்பாந்தோட்டையிலயோ இவ்வாறு இராணுவ முகாம் உள்ள இடங்களைச் சுற்றி நீங்கள் காணிகளைப் பிடித்திருக்கிறீர்களா அல்லது பெரிய பிரதேசங்களை வைத்திருக்கிறீர்களா? அது என்ன தமிழர் பகுதி என்பதால்?
பலாலி என்பது மிகவும் வளங்கொழிக்கும் பூமி; பயிர் செய்யக்கூடிய, எதைப் போட்டாலும் முளைக்கக்கூடிய ஒரு வளம் கொழிக்கும் பூமி. அவ்வாறான பலாலி, வசாவிலான், மயிலிட்டி மக்களுடைய வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு, இன்று அவர்கள் தெருக்களிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மனச்சாட்சி, நீதி வேண்டாமா? இந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் எந்த மனநிலையோடு இந்த பார்லிமென்ட்டில் பேசுகிறார்? மக்களுடைய காணிகளைப் பற்றி தயவுசெய்து சிந்தியுங்கள். அந்த மக்களுடைய காணிகளை மக்களுக்கு வழங்குங்கள்!
உங்களை நம்பி அந்த மக்கள் NPP-க்குதான் வாக்களித்தார்கள். அவர்கள் வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள்: “கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் எங்களுடைய காணிகளை விடுவிப்போம் என்று சொன்ன காரணத்தால், யாழ்ப்பாண மண்ணிலே நாங்கள் NPP-க்கு வாக்களித்தோம்” என்று.
நீங்கள் அந்த மக்களுடைய வாக்குகளைப் பெற்று, பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்ட பின்னர், இன்னும் அவர்களுக்கான ஒரு துண்டு நிலத்தைக் கூட விடுவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிகிற வரைக்கும் இந்த நாட்டில் உங்களுடைய நீதி என்ன? உங்களுடைய நியாயம் என்ன?
பழைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே நடவடிக்கைகளைத்தான் நீங்களும் கடைப்பிடிக்கிறீர்களா? நான் எழுதிய கடிதங்களையும், அந்த முல்லைத்தீவு மக்கள் எழுதிய கடிதங்களையும் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து அந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்.
நீங்கள் ஒரு கண்ணியமிக்க, நேர்மை மிக்க, சம உரிமையோடு இந்த மக்களை மதிக்கிறீர்கள் என்றால், அந்த மக்களுடைய காணிகளை விடுவியுங்கள்! அவர்கள் சொந்த நிலத்திலிருந்து உங்களோடு பேசட்டும். அதற்கான வழியை இந்த அரசாங்கம் ஏற்படுத்தாத வரை, இந்த நாட்டில் இருக்கின்ற மக்களை நீங்கள் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்.
ஆயுதம் இல்லாத நாட்டில், ஆயுதம் தூக்கிப் போராடுகின்ற யாரும் இல்லாத நாட்டில், என்னத்துக்கு ‘பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் காணியைப் பறிக்கிறீர்கள்? திரும்பவும் தமிழர்கள் ஆயுதம் தூக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதைத்தான் நீங்கள் வற்புறுத்துகிறீர்களா?
தமிழ்ப் மக்களை எப்பொழுதும் நீங்கள் ஆயுதம் தூக்கியவர்களாகப் பார்க்க விரும்புகிறீர்களா? தயவுசெய்து அவர்களுடைய காணிகளை அவரிடமே கொடுங்கள்! இதுதான் இந்த நாட்டினுடைய தர்மமும், புத்த தர்மமுமாக இருக்கட்டும். அதனை உடனடியாகச் செய்யுங்கள் என்று நிறைவு செய்கின்றேன் என்றார்.