சிங்களத் தலைவர்களின் மேலாதிக்க மனோநிலை மாறப்போவதில்லை.

சிங்களத் தலைவர்களின் மேலாதிக்க மனோநிலை மாறப்போவதில்லை.

ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள், சிங்களத் தலைவர்களுக்கு பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்த முன்வராமைக்கு, இனமேலாதிக்க மனோநிலையே காரணம். அதற்கு ரணிலும் விதிவிலக்கல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (26) கெளதாரிமுனை மக்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றதென குறிப்பிட்டுள்ளதை மேற்கொள்காட்டி கருத்துரைத்த சிறீதரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லை. சிங்களத் தலைவர்கள் ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த நினைக்கும் மனோநிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவைக்கு சாத்தியமேயில்லை – என்றார்

சிறப்புச் செய்திகள்