”இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும், வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு, மூத்த ஊடகவியலாளர்களான மாமனிதர் தராகி சிவராம், நாட்டுப்பற்றாளர் ஐ. நடேசன், மனித உரிமைச் செயல்பாட்டாளர் சந்திரா பெர்னாண்டோ, அருட்தந்தையர்களான யூஜின் ஜான் ஹெபல் (Eugene John Hebert), சவரிமுத்து செல்வராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் தம்பையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சமூகத்தின் நலன் மற்றும் முன்னாள் போராளிகளின் சமகால அரசியல் பங்களிப்புகள் குறித்த நினைவுரைகள் இடம்பெற்றன.
கலை, கலாசார, இலக்கிய மற்றும் ஊடகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த, அளப்பரிய பங்களிப்புச் செய்த படைப்பாளிகள், கலைஞர்கள், ஆளுமைகளின் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு “வரலாற்றின் வேர்கள்” என்ற மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மதகுருமார்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், மருத்துவர் இளையதம்பி சிறீநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் மேனாள் உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், உறுப்பினர்கள், வேலன் சுவாமிகள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், போராளிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
