அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் தடம் மாறாத் தமிழ்த்தேசியவாதியாக இருஞவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே அவரது பணிகள் இறுதிக்காலம் வரை ஒருசீராய் அமைந்திருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021.10.02 ஆம் திகதி மறைந்த வடக்குமாகாண சபையின் மேனாள் உறுப்பினர் அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்றையதினம் (14) , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் தலைமையுரை ஆற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்நினைவு வணக்க நிகழ்வில், சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனின் நினைவுப்பேருரை இடம்பெற்றிருந்ததோடு, வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்குமாகாண மேனாள் உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருனாசலம் வேழமாலிகிதன், ஓய்வுநிலை கிராம அலுவலர் பரமதாஸ், அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்டோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

அமரர் பசுபதிப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினர், மதகுருமார், உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள்,பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பெருவிழாவில் வைத்து வழங்கப்பட்ட ஆன்மீகத்துறைக்கான கதிரவேலு அப்புஜி ஞாபகார்த்த விருதும் தேகாந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிறப்புச் செய்திகள்