ஈழத்தமிழர்களின் அடையாள மனிதனை இழந்தோம்!

யாழ்.மண்ணின் பெரியவிளானில் பிறந்து, உலக அரங்கில் ஈழத்தமிழர்களுக்கான அடையாளத்தை ஆழப்பதித்த பெருமனிதன் திரு.நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றோம்.

பன்னாட்டு அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்க் கல்வியாளராக, சர்வதேச விளையாட்டு வீரராக, சமூக செயற்பாட்டாளராக என பல்துறை விற்பன்னராக விளங்கிய அவரின் மறைவு ஈழத்தமிழர்களின் அடையாள மனிதர்களுள் ஒருவரது மறைவாக அமைந்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.

1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும், மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய பெருவீரராக அடையாளம் பெறும் இவர், இலங்கையின் முன்னணி உயரம் பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகக் களப்போட்டியொன்றில் முதன்முதலாக இலங்கைக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர் என்னும் வரலாற்றுப் பெருமையின் சொந்தக்காரர். 1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று உயரம்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.

விளையாட்டு வீரர் என்கிற அடையாளங்களைக் கடந்து, ஒரு கல்வியியலாளராகவும் தனித்துவம் பெற்று மிளிர்ந்தவர். இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூகினி மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளமை தமிழர்களின் கல்வித்தரநிலை உயர்வுக்கான பெரும் சான்று எனலாம்.

மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்ட, எளிதில் அணுகத்தகு சாதரண மனிதனாக விளங்கிய அவரின் இயல்புநிறை பண்புநிலையை, யாழ்.ஆனைக்கோட்டையில் அவரை நேரில் சந்தித்த பொழுதொன்றில் அறிந்துகொண்டேன்.

தமிழ் மக்களின் அடையாளங்களை மீள நிறுவுவதாயின் அது அடுத்த தலைமுறையின் கல்விப்பாரம்பரியத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை அறிந்து, அதற்கான காரியங்களை ஆற்ற முனைந்திருந்தார். பல்துறைசார் நிபுணத்துவ ஆலோசகராக ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் உள்ளார்ந்த தீவிரத்தோடு செயலாற்றிய இவர் வடக்குக்கான ‘கல்விச் செயலணி’ ஒன்றின் தோற்றத்துக்காக அயராதுழைத்தவர்.

தாய்த்தேசம் மீது அவர் கொண்டிருந்த பற்றும், விருப்புமே, தனக்குக் கிடைத்த தனிமனித அடையாளங்களையும் அங்கீகாரங்களையும் கூட இனத்துக்கான மூலதனமாய் மாற்றும் சிந்தனையை அவருக்குக் கொடுத்திருந்தது. அத்தகைய பெருமனிதனின் இழப்பால் துயருறும் அதேவேளை அவரின் ஆத்மா அமைதி பெறவும் பிரார்த்திக்கிறேன். அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.

சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.

சிறப்புச் செய்திகள்