இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம் 2023.10.02 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாளையதினம் கொழும்பில்வைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச் அவர்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கையளிக்கப்படவுள்ள ‘இலங்கை நீதித்துறை மீதான அரச நெருக்கீடுகளுக்கு பரிகாரம் காண்பதற்கான பரிந்துரைப்பு மனு’ வாசிக்கப்பட்டது.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத்தீவில் கடந்த எழுபது (70) ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவருகின்ற இன முரண்பாடுகள் தொடர்பிலும், சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட இனரீதியான வஞ்சிப்புகள் தொடர்பிலும், அது இனப்படுகொலையாக வியாபகம் பெற்ற வரலாறு தொடர்பிலும் தங்கள் அறிக்கையாளர்கள் ஊடாக தாங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஒரு தேசிய இனத்தின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், அதன் கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நீதி, நிருவாகத் துறை ரீதியான பாகுபாடுகள் மற்றும் காலத்துக்குக் காலம் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற வன்பறிப்புகள் என்பவை, உலகத்தில் வாழ்கின்ற எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனக்குழுமத்தை எவ்வாறு நிர்மூலமாக்கும் என்பதை உணர்ந்துகொள்வது அத்தனை சிரமமானதல்ல.
இலங்கைத்தீவில் தமிழ்த்தேசிய இனம்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும் ஓரவஞ்சகப் போக்கும் இன்று இலங்கைத்தீவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தினதும் ஜனநாயக நீதித்துறை சார் உரிமைகளைப் பறித்துள்ளது என்பது நிதர்சனமாகும். அரசிற்குப் பலம் கிடைக்கின்ற போதெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு நிருவாகத் துறையின் கைப்பொம்மையாக செயற்படும் விதமாகவே நீதித்துறை உருவாக்கப்பட்டு வருகிறது. நீதிச்சேவை ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கி அதனூடாக நீதிபதிகளின் நியமனங்கள், பதவி உயர்வுகள், நலனோம்பு நயக்கொடைகள், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு என்பவையெல்லாம் அரசியல் அதிகார விருப்பப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்மூலம் அரசு விரும்பிய தீர்ப்புகளைப் பெறவும், ஆணைகளை வழங்கவும், அரசியல் அதிகாரத்தைக் காபந்து செய்யவும் ஏற்றவகையில் இலங்கையின் நீதித்துறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்தின் ஆட்சி பறிக்கப்பட்டு நிருவாகத்துறையின் நோக்கங்களை அடையும் வகையில், விசேடமாக அரசாங்கத்தினது போர்க்குற்றங்கள், இனப்படுகொலை விடயங்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்கள், மனிதப்புதைகுழி விவகாரங்கள், பௌத்தமயமாக்கல், நில மற்றும் பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்பவற்றை சட்டமுறைமைகளுக்கு முரணாகக் கையாள்வதற்கு நீதித்துறை நிர்ப்பந்திக்கப்பட்டதன் விளைவே கௌரவ நீதிபதி சரவணராஜா அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிகழ்வாகும்.
மதிப்பார்ந்த பொதுச்செயலாளர் அவர்களே!
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தனது ஆட்சியின் நோக்காகக் கொண்டு சர்வாதிகாரச் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு திடமான வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகள் எவையுமின்றி, உறுதியான அரசியலமைப்பு ஏற்பாடுகளின்றி வெறும் இனத்துவேசச் சிந்தனைகளின்மேல் ஏறிநின்று இலங்கையின் நீதித்துறையினையும் இங்கு வாழ்கின்ற தமிழ்த்தேசிய இனத்தையும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளின் ஊடாக அரசு அழித்து ஒழித்து வரும் உச்ச தருணமாகிய இவ்வேளையில் தாங்களும் சர்வதேச சமூகமும் நேரடியாகத் தலையீடுசெய்து அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றைப் பாதுகாக்கவும் சகோதரத்துவம் மிக்க இலங்கையைக் கட்டியெழுப்பவும் தங்கள் எல்லாவகை வல்லமைகளும் அணுகுமுறைகளும் சமரசங்களற்ற வகையில் இலங்கைத்தீவுக்குத் தேவையென தங்களை அழைத்து நிற்கிறோம் -என்றுள்ளது.