தமிழ் மக்கள் மீது ஒரு வலிந்த யுத்தத்தை நடத்தி, அந்த யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக கோத்தபாயவைப் புகழ்ந்து பாடியவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் இந்த நாட்டில் தாராளமாக உலாவருகின்றன. அவருக்காகப் புகழ்ந்து பேசுகின்ற அது தமிழ் எழுத்தாளர்களாக இருக்கலாம், சிங்கள எழுத்தாளர்களாக இருக்கலாம், அரசாங்கத்தைப் புகழ்ந்து பாடினால், கொலைகளை நியாயப்படுத்தி எழுதினால் அந்தப் புத்தகங்கள் உலாவருகின்றன.
ஆனால் தீபச்செல்வன் போன்ற தமிழர்களுடைய உண்மைகளை வெளியே கொண்டு வந்தவருடைய ஐந்து வகையான 320 புத்தகப் பிரதிகள் இப்பொழுதும் சுங்கப் பிரிவிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றால், விடுவிக்கப்பட மாட்டாது என்ற ஒரு தோரணையிலே சுங்கப் பிரிவினால் இந்தப் புத்தகங்கள் தடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்துச் சுதந்திரம், இவரது எழுத்துக்கள் வெளியான தேசிய, சர்வதேச ஊடகங்களின் கண்ணியத்தைக் கூட இது பாதித்திருக்கிறது.

மலையகத்திலே இருக்கிற மக்கள் தங்களுக்கு என்று ஒரு சொந்த நிலம் இல்லை, அந்தச் சொந்த நிலத்திலே ஒரு சின்னக் கொட்டிலை போடுவதற்குக்கூட அவர்களுக்கு இந்த நாட்டிலே உரிமை இல்லை என்பதைத்தான் இந்த நாட்டினுடைய அந்த நீலகாமம் இடத்திலே நடைபெற்ற, தோட்டத்திலே நடைபெற்ற விடயம் இன்று சர்வதேச சமூகத்தினுடைய பார்வைக்கு வந்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள் இல்லையென்றால் நான் நினைக்கிறேன் இதைப் போல ஆயிரம் பிரச்சனைகள் கிடங்குகளிலே, மலைகளிலே அது தாக்கப்பட்டிருக்கலாம்.
என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக எனக்கு முன்னர் பேசிய பிரதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போல, மலையகத்திலே இரத்தினபுரி மாவட்டத்தினுடைய காவத்தை, நீலகாமம் தோட்டத்திலே இராணுவத்திலிருந்து விலகிய, கூலிக்காக அமர்த்தப்பட்ட காடையர்களால் அங்கிருந்த தோட்டத்தினுடைய ஒரு பெண் உட்பட இரண்டு பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டார்கள். இந்த நாட்டிலே அரசாங்கங்கள் மாறி வருகின்ற பொழுதெல்லாம் பலப்பல தலைவர்கள் மாறுகின்றார்கள். ஆனால் கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, மலையகத்திலே இருக்கிற மக்கள் தங்களுக்கு என்று ஒரு சொந்த நிலம் இல்லை, அந்தச் சொந்த நிலத்திலே ஒரு சின்னக் கொட்டிலை போடுவதற்குக்கூட அவர்களுக்கு இந்த நாட்டிலே உரிமை இல்லை என்பதைத்தான் இந்த நாட்டினுடைய அந்த நீலகாமம் இடத்திலே நடைபெற்ற, தோட்டத்திலே நடைபெற்ற விடயம் இன்று சர்வதேச சமூகத்தினுடைய பார்வைக்கு வந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் உறவுகின்ற இந்தக் காலகட்டத்தில்தான் இந்தச் செய்தி வெளியே வரக்கூடியதாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் இல்லையென்றால் நான் நினைக்கிறேன் இதைப் போல ஆயிரம் பிரச்சனைகள் கிடங்குகளிலே, மலைகளிலே அது தாக்கப்பட்டிருக்கலாம். நாங்கள் உலகத்திலே இன்று மனிதனுடைய முன்னேற்றம் பற்றிப் பேசுகிறோம், பல மனிதர்களுடைய வளர்ச்சிகள் பற்றிப் பேசுகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையினுடைய பொருளாதாரத்தைக் கட்டி வளர்த்த, இலங்கையினுடைய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாக இருந்த எங்களுடைய மலையகத் தமிழ் உறவுகளுடைய ஒரு சின்ன வீடு அமைத்தல் தொடர்பிலே எந்த அரசாங்கம் வந்தாலும் உங்களுக்கு இதுதான் நிலைமை என்று சொல்லுகின்ற அளவுக்கு மிக மோசமாக காடையர் கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக அந்த மக்களுக்கு நீதி கிடைத்து, சொந்த நிலம் கிடைத்து, சொந்த வீடு உள்ளவர்களாக மலையகத்திலே வாழ்கின்ற தமிழ் உறவுகள் வாழ்வதற்கான ஒரு வழியை இந்த அரசாங்கமாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கடந்த 200 ஆண்டுகளில் பலப்பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் முன்னர் இருந்த பல மலையக அரசியல் கட்சிகளுடைய முயற்சியினால் பல பேருக்கான வீடுகள் கிடைத்தது, பல பேருக்குச் சிறு நிலங்கள் கிடைத்தது. ஆனால் இன்னுமின்னும் பல தேவைகள் அந்த மக்களுக்கு உண்டு. அந்தத் தேவைகளிலே மிகப் பாரிய அளவான தேவை அவர்களுக்கான குந்தியிருப்பதற்கான நிலம். அந்த நிலத்தை வழங்குவதற்கான முயற்சியிலே இந்த அரசாங்கம் முதல் நடவடிக்கை எடுத்து அவர்கள் நிரந்தரமாக அந்த மண்ணிலே வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
குறிப்பாக இன்னுமொரு விடயம், எங்களுடைய கிளிநொச்சி மண்ணிலே பிறந்து வளர்ந்த ஒரு மிகப்பெரிய எழுத்தாளர், மூத்த எழுத்தாளர் தம்பி தீபச்செல்வனுடைய புத்தகங்கள் இலங்கையினுடைய கஸ்டம் காரியாலயத்திலே மறித்து வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவருடைய ‘பயங்கரவாதி’, ‘சயனைட்’ போன்ற நூல்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதேநேரம் ‘எழுத்துக்களின் மூலம் நான் போராடுகிறேன்’, ‘இன்னும் இங்கு இரண்டு தேசங்கள் உள்ளன’ என்ற இரண்டு நூல்களுக்காக அவருடைய அந்த நாவல்கள் தடுத்து வைக்கப்பட்டு இப்பொழுதும் அங்கே கஸ்டம்ஸில் இருக்கிறது.
குறிப்பாக இந்தத் தேவை ஏன் இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது? இந்த நாட்டிலே எழுத்துரிமை ஏன் தடுக்கப்பட்டிருக்கிறது? தமிழ் மக்கள் மீது ஒரு வலிந்த யுத்தத்தை நடத்தி, அந்த யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக கோத்தபாயவைப் புகழ்ந்து பாடியவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் இந்த நாட்டில் தாராளமாக உலாவருகின்றன. அவருக்காகப் புகழ்ந்து பேசுகின்ற அது தமிழ் எழுத்தாளர்களாக இருக்கலாம், சிங்கள எழுத்தாளர்களாக இருக்கலாம், அரசாங்கத்தைப் புகழ்ந்து பாடினால், கொலைகளை நியாயப்படுத்தி எழுதினால் அந்தப் புத்தகங்கள் உலாவருகின்றன. ஆனால் தீபச்செல்வன் போன்ற தமிழர்களுடைய உண்மைகளை வெளியே கொண்டு வந்தவருடைய ஐந்து வகையான 320 புத்தகப் பிரதிகள் இப்பொழுதும் சுங்கப் பிரிவிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றால், உங்களுடைய அரச காலத்திலும் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் இது இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, ஒருமுறை திரும்பிப் பாருங்கள். நீங்கள் பழைய அரசாங்கங்களைப் பேசுகிறீர்கள், பழைய அரசாங்கங்கள் மீது நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள். பழைய அரசாங்கம் நியாயமாக நடக்கவில்லை, ஜனநாயகம் பேணப்படவில்லை, சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றெல்லாம் சொல்லுகிறீர்கள். ஆனால் இதே அரசாங்கமும் இதே பாணியை இப்பொழுது மேற்கொள்கிறது என்பது தீபச்செல்வனுடைய புத்தகங்களிலே மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே நான் நினைக்கிறேன், இந்த கலாசார அமைச்சினுடைய இலக்கியக் குழுவும், பாதுகாப்பு அமைச்சும் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் விடுவிக்கப்பட மாட்டாது என்ற ஒரு தோரணையிலே சுங்கப் பிரிவினால் இந்தப் புத்தகங்கள் தடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்துச் சுதந்திரம், இவரது எழுத்துக்கள் வெளியான தேசிய, சர்வதேச ஊடகங்களின் கண்ணியத்தைக் கூட இது பாதித்திருக்கிறது.
ஆகவே நான் நினைக்கிறேன் இந்த நாட்டிலே மலையகத்திலே காவத்தையில் நடைபெற்றிருக்கிற நீலகாமம் தோட்டத்திலே நடந்த மிக மோசமான வன்முறையும், இப்பொழுதும் இந்த நாட்டிலே இன ரீதியான வன்முறையும், இன ரீதியான பாகுபாடும், நல்லிணக்கமற்ற தன்மையும் மேலோங்கித்தான் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் நல்ல உதாரணங்கள். ஒரு தையிட்டி விகாரையை அகற்ற முடியாது, அதற்குப் பெயர் குறித்து தனியாருடைய தமிழர் காணியிலே வலுக்கட்டாயமாக அமைத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய நிலங்களை வழங்க விடாமல் தடுத்திருக்கிற அரசாங்கம், நீலகாமம் தோட்டத்திலே சொந்தமாக ஒரு கொட்டில் போட்டு தான் படுப்பதற்கு, உறங்குவதற்கு அனுமதிக்காத அரசாங்கம், ஒரு தீபச்செல்வனுடைய புத்தகத்தை வெளியிடுவதற்குக்கூட அனுமதிக்காத அரசாங்கம், நீங்கள் என்ன ஜனநாயகத்தை வெளியே சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் எந்த வகையான உணர்வுகளை வெளிப்படுத்தப் போகிறீர்கள்?
உங்களுடைய காலமும் கடந்த அரசாங்கங்களுடைய காலம் போல் வன்முறையும், துப்பாக்கி கலாசாரங்களும் அல்லது இனங்களை மதிக்கத் தெரியாத சகிப்புத்தன்மையற்ற ஒரு அரசாகத்தான் நீங்கள் இருக்கப் போகிறீர்களா என்பதைத் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுங்கள், திருந்துங்கள். கடந்த காலங்களையாவது பார்த்துத் திருந்தி இனிமேலும் நல்லிணக்கத்தையும் இந்த இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் கொண்டுவர ஒரு புதிய முயற்சியை எடுங்கள் என்று நான் இந்தச் சபையின் ஊடாக வலியுறுத்துகிறேன்.