யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு வழங்கியிருந்தார்.

​குறிப்பாக, “யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரவுண் வீதி முதலாம் ஒழுங்கை – அன்னசத்திர முதலாம் ஒழுங்கைப் பகுதியில் மூடப்பட்டுள்ள புகையிரதக் கடவையை மீளத் திறப்பதன் மூலம், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து அசௌகரியங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு” முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், மூடப்பட்ட புகையிரதக் கடவையினை மீளவும் மக்கள் பாவனைக்கு வழங்கத் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

​மேலும், “மண்டைதீவு – அல்லைப்பிட்டி இணைப்பு வீதி நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமையினால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, தற்காலிக புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

​அத்துடன் பின்வரும் திட்ட முன்மொழிவுகளையும் அவர் சபைக்கு வழங்கியிருந்தார்:
1.வழுக்கியாறு, அராலி, வேலணை, குறிகட்டுவான் வீதிக்கான நிரந்தரத் தீர்வு.

2.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படாத மக்களை மீள்குடியேற்றுவதற்கான காலவரையறையைத் தீர்மானித்தலும், சட்டவிரோதக் கட்டுமானங்களைத் தடுத்தலும்.

3.யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய காணிகளின் முழுமையான விவரங்களை ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பித்தல்.

​தொடர்ந்து, வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் என்பது உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, எறிகணைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றிய ஆசிரியர்களது இடமாற்றங்களில் மனிதாபிமானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

​கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்