March 19, 2026

​”சுயநல அரசியலைக் கடந்து ஒருமித்த இலக்கை நோக்கி ஒன்றிணைவோம்”: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

தமிழர்களிடையே நிலவும் “நான் – நீ” என்ற போட்டி மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான அரசியல் இலக்கோடும், ஒற்றுமையோடும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று மேம்பட்ட நிலையில் இருந்திருக்க முடியும் என,” அண்மையில் நடைபெற்ற கைதடி, நவபுரம், நவசன சமூக நிலையத்தின் அறுபத்தி ஓராம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனித்து நின்று போராடிய போது, தமிழ் அரசியல் தரப்பினர் ஆதரவு வழங்கத் தயக்கம் காட்டினார்கள்; பின்னர், அவர்கள் இராணுவ ரீதியாகப் பலமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தரப்பினரும் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் கைகோர்த்தனர்.”

எனினும், 2009-இல் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, ஒருமித்த தலைமைத்துவம் இல்லாத சூழலில் தமிழ் அரசியல் தரப்புகள் மீண்டும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் சுயநல நோக்கங்களையும் முன்னிறுத்தத் தொடங்கியுள்ளன. தமிழினம் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு தெளிவான இலக்கோடும், உறுதியான ஒற்றுமையோடும் செயற்பட்டிருந்தால், இன்று அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஒரு மேன்மையான நிலையை எட்டியிருக்க முடியும் என்பதே நிதர்சனமாகும்.

இலங்கையில் மாறிமாறி வரும் ஆட்சி அதிகாரங்கள் எத்தகையதாக இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் தென்னிலங்கை அரசு இயந்திரம் மிகத்தெளிவான மற்றும் உறுதியான பொறிமுறையைக் கொண்டுள்ளது.

தென்னிலங்கை அரசியல் தலைமைகளான மகிந்த ராஜபக்ச முதல் தற்போதைய அநுர குமார திசாநாயக்க வரை அனைவரும் தமிழர் விவகாரத்தில் ஒரே விதமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையின் ஊடாகச் செயல்படும் வேளையில், தமிழர் தரப்பு தமக்குள் நிலவும் தலைமைத்துவப் போட்டி மற்றும் குரோத உணர்வுகள் காரணமாக ஒருமித்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியாமல் தடுமாறுகின்றது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படும் அரச கடிதங்கள் இன்றும் சிங்கள மொழியிலேயே வருகின்றன. வர்த்தமானி அறிவித்தல்கள் கூட நீண்ட தாமதத்திற்குப் பின்னரே தமிழில் வெளியாகின்றன.தமிழ் மக்களின் கல்விப் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு முறையான அங்கீகாரமோ அல்லது பாதுகாப்போ இல்லாத நிலை தொடர்கின்றது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, கைதடி, நவபுரம், நவசன சமூகத்தின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட தாச்சிப் போடியின் வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நவசக்தி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸ் பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் பிரதிநிதிகள், நவசக்தி விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள், நவசனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.”