யாழ்ப்பாணத்தில் 300 ஆண்டுகால வீதி திடீர் மூடல்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரதக் கடவை வீதி ஒன்று திடீரென மூடப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ். நகரின் பிரவுண் வீதி இரண்டாம் ஒழுங்கையையும் அன்னசத்திர வீதியையும் இணைக்கும் இந்தப் போக்குவரத்துப் பாதையே கடந்த 16-ஆம் திகதி முதல் புகையிரதத் திணைக்களத்தினால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளாகத் தாங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, யாழ். இந்து மகளிர் கல்லூரி மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை உள்ளிட்ட பல முன்னணிப் பாடசாலைகளின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினமும் இந்தப் பாதையையே தங்களது பிரதான போக்குவரத்து வழியாகக் கொண்டுள்ளனர்.

இதுவரை காலமும் பாதுகாப்பற்ற ஒரு கடவையாக இருந்தபோதிலும், புகையிரதத் திணைக்களத்தினால் போடப்பட்ட தற்காலிகப் பாதையூடாகவே மக்கள் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். எனினும், கடந்த 16-ஆம் திகதி எவ்வித முன்னறிவிப்புமின்றி, இந்தப் பாதையைப் பயன்படுத்த வேண்டாம் எனத் திணைக்களம் அறிவித்தல் பலகையை வைத்துள்ளதோடு, பாதையையும் தடை செய்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் அழைப்பினை ஏற்று, இன்றைய தினம் குறித்த இடத்திற்கு நேரில் விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் புகையிரதத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் தான் ஏற்கனவே பேசியுள்ளதாகவும், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தப் பாதையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், அங்கு பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றினை அமைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்