”SRI LANKA’S GOT TALENT” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அசாத்திய நடனத் திறனை வெளிப்படுத்திய செல்வன் சுதாஸ் ரஜீவன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

”யுத்தத்தின் வலியின் உச்சியிலிருந்து சாதனையின் உச்சம் வரை சென்ற எங்கள் சாதனையாளன்” என்ற பொருண்மையில், இராமநாதபுரம் மத்தி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சாதனையாளன் மற்றும் அவரைப் பயிற்றுவித்த நடன ஆசிரியருக்கான மதிப்பளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்:
”எமது மண் வெறும் மணற்பரப்பல்ல; அது தியாகங்களாலும், கண்ணீராலும், குருதியாலும் எழுதப்பட்ட ஒரு வீர வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு வடுவாக, தனது நான்கு வயதிலேயே யுத்தத்தின் கோரத்தினால் ஒரு காலினை இழந்த சிறுவன் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். நான்கு வயது என்பது ஒரு குழந்தை ஓடி ஆடித் திரிய வேண்டிய பருவம். அந்தப் பருவத்திலேயே விதியால் வஞ்சிக்கப்பட்டு, ஒரு காலினை இழந்தபோது, உலகம் அந்தப் பிஞ்சு உயிரைப் பார்த்துப் பரிதாபப்பட்டிருக்கலாம். ஆனால், இன்று அதே உலகம் அவரைப் பார்த்து வியந்து நிற்கிறது.

தனக்கிருக்கும் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், தடைகளையே படிக்கட்டுகளாக மாற்றி ‘Sri Lanka’s Got Talent’ மேடையில் அவர் நிகழ்த்திய அந்த அபாரமான நடனம், வெறும் கலைநிகழ்ச்சி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் எழுச்சிக் குரல்.
எத்தனையோ இழப்புகள், எத்தனையோ வலிகள், சர்வதேச ரீதியாக எமக்கு எதிராகக் கட்டப்பட்ட எத்தனையோ தடைகள்… அத்தனையையும் தாண்டி எமது இனம் இன்னும் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்குத் தம்பி ரஜீவன் போன்ற இளைஞர்களின் தளராத மன உறுதியே காரணம்.

சுதாஸ் ரஜீவன் இன்று ஒற்றைக் காலால் ஆடிய நடனம் எமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது: ‘உறுப்புக்கள் இழக்கப்படலாம், ஆனால் உறுதி என்றும் இழக்கப்படக் கூடாது.’ இந்தச் சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.
குறைகளைச் சொல்லி முடங்கிக் கிடப்பவர்களுக்கு மத்தியில், இருப்பதை வைத்துச் சிகரம் தொட முடியும் என்று நிரூபித்திருக்கும் ரஜீவன் ஒரு சிறந்த முன்மாதிரி. எமது இளைஞர்கள் சவால்களைக் கண்டு அஞ்சக் கூடாது. போராட்டக் களமாக இருந்தாலும் சரி, கலை மேடையாக இருந்தாலும் சரி, தளராத முனைப்பும் பயிற்சியும் இருந்தால் எம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த மேடையே சாட்சி.” எனத் தெரிவித்தார்.

திருமதி தயாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராகச் சட்டத்தரணி திரு. சிதம்பரம் கருணாநிதி, இராமநாதபுரம் கிராம அலுவலர் திரு. ஆறுமுகம் பபிகரன், கௌரவ விருந்தினர்களாகத் தாயகச் செயலணி இணைப்பாளர் சங்கநாதப்புகழ் பேபி ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.