நெடுநாளைய நோயின் பிடியில் உருகிக் கரைந்த சச்சி சேரின் உயிர் பிரிந்த செய்தி, எமக்குத் தந்திருக்கும் துயரின் வலிமை தாங்கொணாதது.
தாயக விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பங்காளனான அவரின் பணி, பின்வந்த நாட்களில் ஆசிரியத்துவத்தின் தளத்தில் ஆழப்பதியத் தொடங்கியது. அவரிடத்தே நிறைந்திருந்த ஆங்கில மொழிப்புலமையும், தகைமையும் அவரை ஓர் ஆங்கில ஆசானாக அடையாளம்பெறச் செய்திருந்தாலும், பல்துறை ஆற்றலின் பரிமாணங்கள் அவருள்ளிருந்ததை அவரை அறிந்தோர் நன்கறிவர்.
நேர்த்தியான உரையாடற் பாங்கு, அங்கதச் சுவை பொங்க பேசும் பாணி, அரசியல் பட்டறிவு, அதன்பாற்பட்ட நுண்ணரசியல் ஆய்வுணர்வு, இயல்பாக அவருள்ளிருந்த கற்பனைத்திறன் என்பவற்றின் கூட்டாக வெளிப்படும் சச்சி சேரின் கதைமளும் கருத்துகளும், அவரைச் சுற்றியுள்ளோரின் கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் உரையாடற்களமாகவே எப்போதும் விரிந்திருக்கும்.
இந்தத் தனிமனிதப் பண்புநிலையால் எம்முடன் நெருக்கமான நட்பைப் பேணியதைத் தாண்டி, உயிர் அச்சுறுத்தல்களும், இராணுவ நெருக்கடிகளும் நிறைந்திருந்த 2010 களில் ஆரம்பித்த எனது அரசியற் பயணப்பாதையில், கிளிநொச்சி மண்ணில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை மெல்லமெல்ல வேரூன்றச் செய்ததிலும், பின்வந்த நாட்களில் கட்சிக்கான கட்டமைப்பொன்றை முறையாக நிறுவியதிலும், தேர்தல்கால களப்பணிகளிலும் எமது கட்சியின் முதன்மை உறுப்பினராக எம்முடனிருந்து சச்சி சேர் ஆற்றிய அரசியல், சமூகப் பணிகளின் ஆழம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
தனிமனிதனாகவும், அரசியல் ரீதியாகவும் என்னை ஆழமாக விசுவாசித்திருந்த நல்ல நண்பன் திரு.கந்தையா சச்சிதானந்தசிவம் அவர்களின் இறப்பு எமக்குப் பேரிழப்பே.!
இருந்தபோதும் “நோயுற்ற மனிதர்களுக்கு மரணமே விடுதலை” என்ற வரிகளின் வலியுணர்ந்தவர்களாக, அவர்தம் ஆத்மா சாந்திபெறவும், இந்த இழப்பை ஏற்கும் வல்லமை அவரது குடும்பத்தினருக்கு வாய்க்கவும் பிரார்த்திக்கிறேன்.
சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்.
கிளிநொச்சி