மாண்புறு மருத்துவருக்கு புகழ் வணக்கம்…!

ஈழ விடுதலைப் போரின் வீரவரலாற்றில் நிகழ்ந்தேறிய எண்ணிலடங்கா தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அடையாளம் தந்த பலருள்ளும், தனிப்பெரும் ஆளுமையாய் களப்பணியாற்றிய மருத்துவப் போராளி Dr.ஜெயகுலராஜா மறைந்தார் என்ற செய்தி எங்கள் மனங்களெங்கும் துயரை நிறைத்திருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராய், எங்கள் அறப்போர் முகிழ்ப்புப் பெற்றிருந்த காலத்தில் மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்கள் தன் மருத்துவத்தால் மாபெரும் மனிதநேயப் போராளியாக அடையாளம்பெறத் தொடங்கியிருந்தார்.

1983 இல், சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விழுப்புண் அடைந்த சீலன், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட போராளிகளுக்கு சிகிச்சையளித்தமைக்காகக் கைதுசெய்யப்பட்டு, மூத்த போராளிகளான குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் வெலிக்கடைச் சிறையில் இருந்து, பின் சிறையுடைப்பில் சிறை மீண்டிருந்தார்.

மருத்துவப் பணிகளின் விளிம்பில், விடுதலைப் புலிகளின் சமூகப் பணிகளின் மையமாக கட்டமைக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உருவாக்கத்திலும், இயங்குநிலையிலும் உடனிருந்து உழைத்திருந்தார். அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து அரசியற்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

ஒரு இனத்தின் கனவைச் சுமந்த தேசப்போருக்காக, தன் இயலுமைகள் அனைத்தையும் கரைத்து, களப்பணியும் காலப்பணியும் ஆற்றிய மருத்துவர், போராட்ட மெளனிப்பின் பின்னரும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற சிந்தனையிலும், கொள்கையிலும் பற்றுறுதி மிக்கவராக, தன் வாழ்வின் இறுதிக்கணம் வரை கொண்ட கொள்கை நின்று நீங்கா மாமனிதனாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

ஈழத் தமிழினத்தின் கனவைத் தன் கனவாய்ச் சுமந்து, மாண்புறு பணிகளால் எம் மனங்களில் நிறைந்த மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்களுக்கு எம் புகழ்வணக்கம்.

சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

சிறப்புச் செய்திகள்