பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், மாணவர்களுக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தையற்கலைப் பயிலரங்கினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்:

”இன்றைய இந்தச் சத்துணவு வழங்கும் நிகழ்வு என்பது வெறும் பசியாற்றும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு ஆரம்பப்புள்ளி. ஒரு தேசத்தின் பலம் அந்தத் தேசத்தின் பொருளாதார வளத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை. மாறாக, அந்தத் தேசத்தின் பிள்ளைகள் எத்தகைய உடல் வலுவோடும், மன உறுதியோடும் வளர்க்கப்படுகிறார்கள் என்பதில்தான் அந்த இனத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

ஆரோக்கியமான ஒரு சமுதாயமே அறிவுப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஒரு இனம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அதன் பிள்ளைகள் போஷாக்குள்ளவர்களாகவும், சிந்தனைத் தெளிவுள்ளவர்களாகவும் வளர வேண்டும். அந்த வகையில், இந்தப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டம் என்பது எமது இனத்தின் வேர்களைப் பலப்படுத்தும் ஒரு செயலாகும்.

நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல; மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து மீண்டு வந்தவர்கள். மருந்துப் பொருட்களுக்குக்கூடத் தட்டுப்பாடு நிலவிய அந்தச் சூழலிலும் எமது உறுதி தளரவில்லை. அந்த வலிகளிலிருந்து பிறந்தவர்கள்தான் நீங்கள். எனவே, உங்களுக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் எமது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கின்றன. ‘எங்கே செல்கிறது எமது சமூகம்?’ என்ற அச்சத்தை இவை ஏற்படுத்துகின்றன. வன்முறையும், அறமற்ற செயல்களும் ஒருபோதும் ஒரு சமூகத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தராது. கல்வியறிவு மட்டும் ஒருவனை மனிதனாக்கிவிடாது; அதோடு சேர்ந்த ஒழுக்கமும், நெறிமுறைகளுமே ஒருவனைச் சிறந்த மனிதனாக மாற்றும்.
அன்பார்ந்த மாணவர்களே, சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் வன்முறைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது உங்கள் வாழ்க்கையின் கவசமாக இருக்கட்டும். எமது முன்னோர்கள் எத்தகைய தியாகங்களைச் செய்து எமக்கு இந்த நிலத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் திரு. சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளர், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.