அடக்குமுறைகளும் நில அபகரிப்பும் தொடர்கிறது: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி

இன்றைய தினம் அரசு தொடர்பான விவாதங்களிலும், மத்திய வங்கி தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமாக இந்த நாட்டிலே இந்த அரசு (NPP) பொறுப்பேற்ற பிற்பாடும் பலவிதமான நெருக்குதல்களையும், நெருக்கடிகளையும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் உத்தியோகத்தர்களும் சந்திக்கிறார்கள் என்பதையும் தமிழ்மக்கள் சந்திக்கிறார்கள் என்பதையும் நான் இந்த இடத்திலே பதிவு செய்ய விரும்புகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிக முக்கியமாக கடந்த 2026 பங்குனி மாதம் 16-ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய மூன்று மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காரியாலயத்திலே பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

தர்மலிங்கம் ஜதுர்ஷன் – கலைப்பீட மாணவர் சங்கத் தலைவர், யாழ் பல்கலைக்கழகம்,தயாபரன் லஜிதரன் – மாணவர் ஒன்றியத் தலைவர், யாழ் பல்கலைக்கழகம்,ஏ. அபிஷேக் ஆகிய இந்த மூன்று மாணவர்களும் அவர்களோடு சேர்ந்து இன்னும் சில மாணவர்களும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காரியாலயத்திலே வைத்து கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல்கலைக்கழகத்திலே படிக்கின்ற மாணவர்கள் தங்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, தங்களுடைய உரிமை தொடர்பாகக் கருத்துக்களை முன்வைப்பதற்கு, தங்கள் இனம் சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசிலும் அவர்களுக்குத் தடையாக இருக்கிறது என்பதைத்தான் உங்கள் அரசும் அச்சுறுத்தல் ஊடாக வெளிப்படுத்துகிறது என்பதை இந்த செயற்பாடுகள் முன்வைத்திருக்கின்றன. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இனிவரும் காலங்களிலாவது பல்கலைக்கழக மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரமாகவும் தங்களுடைய கல்வியை மேற்கொள்ளக்கூடிய வகையிலே அரசின் புலனாய்வாளர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைகள் இருக்கக்கூடாது என்பதை நான் மீண்டும் உங்களிடம் வினையமாகத் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பான பதிவையும் கடிதத்தையும் நான் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்.

அதேபோல, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினுடைய நிர்வாக உறுப்பினராக இருக்கின்ற திருமதி தயாபரன் ஜெயச்சித்ரா அவர்கள் இன்றைய தினம் கொழும்பிலே இருக்கின்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு விசாரணைக்கு காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே மூன்று தடவைகளுக்கு மேல் அவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கிளிநொச்சியிலும் அவர் பல தடவைகள் பொலிஸாரால் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

வளர்ந்த பிள்ளைகளை உடைய ஒரு தாய், தமிழர்களுடைய தேசியப் பயணம் தொடர்பான அவருடைய செயற்பாடுகளை முன்னெடுக்கிற பொழுது, அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைக்கு உட்படுத்துவது, அவர்கள் தங்களுடைய இயல்பான உரிமைகளை வெளிப்படுத்த முடியாமல் தடுக்கப்படுகிறார்கள் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே மூன்று தடவைகளுக்கு மேல் அவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கிளிநொச்சியிலும் அவர் பல தடவைகள் பொலிஸாரால் அடிக்கடி விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். இன்று காலை மீண்டும் அவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார், அந்த கடிதங்களையும் நான் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்.

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, கடந்த 2-ஆம் திகதி (ஏப்ரல் மாதம்) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில், ஊர்வனிகன்பற்று என்கிற கிராமத்திலே இருக்கின்ற காணி அந்த மக்களுக்குரிய சொந்தக் காணி. அவர்கள் பரம்பரையாக, வரலாற்று ரீதியாக ஆண்டாண்டு காலம் ஆறு ஏழு பரம்பரையாக ஆண்டு வந்த காணி.

அந்தக் காணிக்குள் முத்துமாரியம்மன் ஆலயம் உண்டு, பொதுநோக்கு மண்டபம் உண்டு, சிறுவர் முன்பள்ளி உண்டு, சிவபூமி அறக்கட்டளைக்குரிய காணியும் அங்கே உண்டு. இவ்வளவு இருந்தும் கூட, அந்த மக்கள் 90-ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அந்த இடத்திலிருந்து வெளியேறி, மீண்டும் தங்களுடைய சொந்த இடத்திற்குப் போய் குடியேறி இருந்தார்கள். பின்னர் 2006-ஆம் ஆண்டு மீண்டும் யுத்தம் வெடித்த பொழுது அவர்கள் அந்த இடத்திலிருந்து இடம்பெயர வேண்டிய நிலை வந்தது.

2006-க்கு பிறகு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட இராணுவத்தின் இயந்திர பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள், இப்பொழுது அங்கே இருக்கின்ற கிட்டத்தட்ட 30 ஏக்கர் வரையான காணியைத் தங்களுக்குத் தர வேண்டும் என்று சட்டவிரோதமாக அளந்து எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கடந்த 2-ஆம் திகதி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளருடைய வேண்டுகோளுக்கு இணங்க, நில அளவைத் திணைக்களம் இந்தக் காணியை அளந்து இராணுவத்திற்கு வழங்குவதற்கு முயற்சி செய்தார்கள்.

அவ்வாறான முயற்சியை அங்கு திரண்ட மக்களும், அங்கு வந்திருந்த அரசியல் தலைவர்களும் பூரணமாகத் தடுத்து நிறுத்தி இருந்தார்கள். குறிப்பாக அந்த மக்கள் தங்களுடைய கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தார்கள்: ‘இந்த 4-வது பட்டாலியன் (SLEME) என்கின்ற மின்சாரம் மற்றும் இயந்திரம் வசமுள்ள இராணுவ முகாம் எங்களுடைய பரம்பரைக் காணி, இதனைத் தயவுசெய்து அளக்காதீர்கள், எங்களிடம் தாருங்கள்’ என்று மக்கள் கேட்டிருந்தார்கள்.

பின்னர் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளரோடு நான் தொடர்புகொண்டு பேசிய பிறகு இந்த அளவீடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. இங்கே கிட்டத்தட்ட 21 பேர் கையெழுத்து வைத்துத் தந்த கடிதத்தை நான் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கிறேன். அதில் அந்த மக்கள் இந்தக் காணி தங்களுடையது என்பதைத் தெளிவாகத் தந்திருக்கிறார்கள். அதில்:

முருகேசு செல்வராசா,மயில்வாகனம் பாலச்சந்திரன்,சிவபூமி அறக்கட்டளை நிலையம்,தம்பையா வள்ளிபுரம்
சந்திரரூபன் உதயகலா,மார்க்கண்டு பொன்னம்மா,காண்டிபன் பத்மாவதி,பிரகாஷ் சுபத்ரா,செல்லப்பா தியாகராசா,பாஸ்கரன் ஜோதீஸ்வரி,துஷ்யந்தன் சுஜீபா,சிவசிதம்பரம் லோஜினி,கமலாபதி செல்வராசா,கனகரத்தினம் மகேஸ்வரி,முருகேசு யோகராணி,செந்தில்வேலன் மேனகை,தர்மலிங்கம் தாசன்
இவர்களுடைய இந்தக் காணிகள் பரம்பரையாகச் சொந்தக் காணிகள். இந்தப் பட்டியலையும் நான் சபாபீடத்திற்குச் சமர்ப்பிக்கிறேன்.

மக்களுடைய சொந்தக் காணிகளை இவ்வாறு வலுக்கட்டாயமாக ஒரு யுத்தம் இல்லாத நாட்டிலே அளந்து பறித்துக் கொடுப்பதற்கு ஏன் இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது? இது எவ்வளவு கொடூரமானது? இன்றைக்கும் வலிகாமம் வடக்கிலும் யாழ்ப்பாண பகுதியிலும் கிளிநொச்சியிலும் மக்கள் நிலத்தை இழந்து தெருக்களிலே அனாதைகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சொந்த காணிகளை அவர்களுடைய கண்ணுக்கு முன்னால் அரசாங்கம் நில அளவை திணைகளத்தை அனுப்பி இராணுவ பொலிஸ் பிரசன்னத்தோடு அளக்க முற்படுவது மிக கொடூரமானது. ஏன் பழைய அரசாங்கம் செய்ததையே நீங்களும் செய்கிறீர்கள்?

எனவே கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த மக்களுடைய துயரங்கள் மிகவும் முக்கியமானவை.”இந்த நாடு ஏன் இன்னும் உருப்படாமல் இருக்கிறது? நான் அடிக்கடி சொல்வதுண்டு, உங்கள் கர்மவினைகள் உங்களை ஒருகாலமும் உருப்பட விடாது என்று.

கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகள், தமிழ் மக்கள் மீது புரிந்த யுத்தங்கள், இன்றைக்கும் அந்த மக்களை தெருக்களில் வைத்துக்கொண்டு அவர்களுடைய காணிகளையும் விடாமல் பறிக்க முயற்ச்சிபது மிகக் கொடூரமானது

கண்ணுக்கு முன்னாலேயே தன்னுடைய நிலத்தை அளந்து பறிப்பது என்பது சொந்தக் காணிக்காரருடைய மனநிலையை, நீங்கள் அந்த உரிமையாளராக இருந்தால் உங்கள் மனங்களால் தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.

இந்த அரசு காலத்தில், பல்கலைக்கழக மாணவர்களை விசாரிக்கிறீர்கள். சாதாரணமாக அரசியல் உரிமைக்காகப் போராடுகின்ற செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு கொழும்புக்கும், கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் கூப்பிடுகிறீர்கள். மக்களுடைய காணிகளைப் பறிக்கிறீர்கள், வலுக்கட்டாயமாக அளந்து எடுக்கிறீர்கள். இது என்ன நீதி?

நாங்கள் எல்லாரும் சம உரிமை என்று நீங்கள் பேசுகிறீர்கள், உங்கள் அரசு பேசுகிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், மக்களுடைய உரிமைகளை மதிக்கத் தெரியாத ஒரு அரசு, மக்களுக்கான அவர்களுடைய எண்ணங்களைச் சரியான முறையில் புரிந்துகொண்டு ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முன்னேற முடியாது.

இந்த அரசுகூட தமிழ் மக்களுடைய பிரச்சினையை இந்த மண்ணில் இருக்கிற இனப்பிரச்சினையை தீர்பதற்கான சிந்தனை எண்ணங்களில் எள்ளளவும் காலடி எடுத்து வைக்கவில்லை.

நீங்கள் சமாதானம் பற்றிப் பேசுதல், நல்லிணக்கம் பற்றிப் பேசுவதற்காக நீங்கள் கடக்க வேண்டிய பாதை இன்னும் கடினமானதும் தூரமானதும் ஆகும். முதலில் அதனைச் சிந்தியுங்கள், அதற்கான பாதையைத் திறங்கள். மக்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் மூலம்தான் ஒரு நியாயமான நாட்டை, இனங்களை இணைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உங்களால் உருவாக்க முடியும் என்பதை நான் மீண்டும் பதிவு செய்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்