“உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

​இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “உலகம் சத்தங்களால் நிறைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மௌனத்திற்கு ஒரு வலிமையான மொழி உண்டு என்பதை உங்கள் கண்கள் எனக்கு உணர்த்துகின்றன.

‘செவிப்புலன் அற்றவர்கள்’ என்பது உங்களின் குறைபாடு அல்ல; அது ஒரு தனித்துவமான ஆற்றல். சத்தமில்லாத உலகில் நீங்கள் கட்டியெழுப்பும் அன்புக்கும் கலைக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்பதை நான் அறிவேன்,”

​”தேர்தல் திணைக்களத்திடம் நீங்கள் முன்வைத்த கோரிக்கையினையும், மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு பேரணியாக சென்று நீங்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினையும், அறிய முடிகிறது. இது தொடர்பான உங்கள் நியாயமான கோரிக்கைகளை பெற்றுத்தருவதாக நான் உறுதியளிக்கிறேன்.

உள்ளம் எதற்கும் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல. உங்கள் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தி, எமது தமிழ் தேசிய இனத்தின் அடையாளமாக நீங்கள் மிளிர வேண்டும்.

அத்தகைய உங்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்திற்கும் உங்கள் முன்னேற்றத்திற்கும், பாதை தோறும் பலமிழக்க வைக்க எத்தனை சவால்கள் இருந்தாலும் மனதின் திண்மை கொண்டு ஒருங்கிணைந்து வெற்றி பெறுங்கள் உங்களோடு எப்போதும் நாம் உடனிருந்து, உங்கள் கோரிக்கைகளை பெற்று தருவதற்கு பக்கபலமாக இருப்போம்,” எனத் தெரிவித்தார்.

​திரு. கெ. பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பின் உறுப்பினர் திருமதி விஜயகுமார் சியாமளா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. எஸ். வரதபாஸ்கரன், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் திரு. தி. உமாசங்கர், சமூக சேவை உதவி உத்தியோகத்தர்களான திருமதி அனுசா அருந்தவராசா, திருமதி தர்மினி ரஜீவன் ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சிவதர்சினி பாலசுப்பிரமணியம், திருமதி ரேணுகா நகுலன், திரு. சுப்பிரமணியம் சுகுமாரன், தினேஸ்குமார் றோஜிதா ஆகியோரும் கலந்துகொண்டதோடு செவிப்புலன் வலுவற்றோர் அமையத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்