உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் கலாசாரச் சீரழிவுகள் மற்றும் போதைப்பொருள் போன்ற சவால்களை முறியடிக்க விளையாட்டுத் துறை ஒரு தற்காப்புக் கேடயமாகச் செயல்படுகிறது.
விளையாட்டு மைதானங்கள் என்பவை வெறும் போட்டிகளுக்கான இடங்கள் மட்டுமல்ல; அவை ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் போதிக்கும் நவீனப் பள்ளிக்கூடங்கள். எனவே, ஊர்தோறும் இத்தகைய விளையாட்டு நிகழ்வுகளை ஊக்குவிப்பதன் மூலமே, ஆரோக்கியமான சிந்தனையும், வலுவான உடல்நலமும் கொண்ட ஒரு சீரிய தமிழ் சமூகத்தை நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மெய்ப்பிப்பதாக இவ்விளையாட்டு நிகழ்வு அமைந்தமை கூடுதல் சிறப்புக்குரியது.”

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. தில்லைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் திரு. ஐயாத்துரை இராஜரட்ணம், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி. சோ. செல்வாராணி ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் திரு. வி. சுவிஸ்கரன், கழகத்தின் மூத்த உறுப்பினர் திரு. சு. தேவதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
