தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே: அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

சகோதர இனத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் கடந்த மே 18ஆம் தேதி கொழும்பிலே நடைபெற்ற மே 18 இன அழிப்பு நாளை மிக பகிரங்கமாக, இலங்கையிலே தமிழர்கள் மீது புரியப்பட்டது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். சிங்கள மக்களிடமிருந்து இவ்வாறான ஒரு கருத்து வெளிவருதல் என்பது மிக அருமை. அது மிகவும் ஆரோக்கியமான ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரணம், தமிழ் மக்களுக்கு நடைபெற்றது எல்லோருக்கும் தெரிந்த வகையிலே மிகப்பெரிய இனப்படுகொலை என்பது உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயமாகவே இன்றும் இருக்கின்றது. இலங்கையிலே முதன்முதல் நடந்த, இலங்கையினுடைய போர் நடவடிக்கைகளை, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை விசாரிக்க என உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் மன்னாரின் பேராயராக இருந்த மறைந்த ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் தெளிவான ஒரு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்துக்கும் வழங்கியிருந்தார், அதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் அதனை அவர் கையளித்திருந்தார்.

அவர் அவற்றை கையளித்த பிற்பாடு பத்திரிகையாளரிடம் பேசுகின்ற பொழுதும் சொல்லியிருந்தார்.இந்த குறிப்பாக ஒரு ஆறு, ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக, ஒரு எட்டு மாதங்களுக்குள் மிகப்பெரிய இனப்படுகொலை, 1,46,000க்கும் மேற்பட்டவர்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள், காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இது உலக வரலாற்றிலே நடந்த மிக பேரவலமான மனித பேரவலம். இந்த மனித இனப்படுகொலை என்பது தமிழர்கள் மீது புரியப்பட்டது என்பதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். அந்த நேரத்தில் யாரும் இதனைப் பற்றி வெளியிலே பேசிக்கொள்ளவில்லை.

இப்பொழுது ஒரு தென்பகுதியைச் சேர்ந்த, சகோதர இனத்தைச் சார்ந்த ஜீவந்த பீரிஸ் அருட்தந்தை அவர்கள் தெளிவாக ஒரு கூருணர்வோடு இந்த விடயத்தை ஒரு நீண்ட உரையினூடாக வெளிவைத்த பொழுது, அது வெளியிலே கொண்டுவந்த பொழுது, சிங்கள ஆயர்கள் மத்தியிலும் சரி, அல்லது சிங்கள அருட்தந்தையர்கள் மத்தியிலும் இது ஒரு மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அது தொடர்பாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் பல தடவைகள் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், இந்த மண்ணிலே கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் இருக்கிற காலத்திலேயே அவருடைய கண்ணுக்கு முன்னால் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், உணவின்றி படுகொலை செய்யப்பட்டார்கள், நீரின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் கொத்தணி குண்டுகளுக்கும் பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் இரையாக்கப்பட்டார்கள். மிகப்பெரிய போர் அவலங்களைச் சந்தித்த பொழுதெல்லாம் மெல்கம் ரஞ்சித் கர்தினால் அவர்கள் மௌனம் சாதித்தார்.

ஆகவே, அவர்களுடைய அந்த மதம், அவரிடம் இருக்கிற மனிதநேயம், அவரிடம் இருக்கிற உலகத்துக்குச் சொல்லுற செய்தி என்பது பொய்த்துப் போயிருக்கின்றது. அவர் ஒரு பொய்யான கருத்தை, நேர்மையில்லாத கருத்தை வெளியிலே தெரிவிக்கிறார் என்ற கருத்து மிக பரவலாகப் பேசப்பட்டது. அவர் தொடர்பான இந்த கருத்துக்களுக்கு நான் பாராளுமன்றத்திலும் என்னுடைய எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறேன். இப்பொழுதும் கூட நான் இலங்கையினுடைய கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பிலே, அவர் ஒரு சிங்கள பௌத்த மனநிலையிலேயே தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார் என்பது நாங்கள் தெளிவாக ஒரு பார்வையை அவர் மீது வைத்திருக்கிறோம். அவர் தன்னை ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒரு பௌத்த—கிறிஸ்தவன் என்று சொல்லாமல்—ஒரு பௌத்தனாகவே தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்ளுகிறார் என்பது எங்களுடைய கருத்து.

ஜீவந்த பீரிஸ் அவர்கள் கொண்டுவந்த உண்மைகள், சிங்கள மக்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற அளவுக்கு அது இன்றைய நிலையை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆகவே அவர் மீது கால்புணர்ச்சிகளைச் சொல்பவர்கள், அவர் மீது குற்றங்களைச் சுமத்துபவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுதும் தமிழர்கள் இங்கே மெல்ல மெல்ல இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, அவர்களுக்கான தொழில் முறைகள் இங்கு இல்லை. இங்கு இருக்கின்ற ஒவ்வொரு இளைஞன், யுவதியும் வெளிநாடு பற்றியே சிந்திக்கக் கூடிய அளவுக்கு, அல்லது இந்த நாட்டிலே இருக்க முடியாத அளவுக்கு அவர்கள் தானாகவே புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. அதேநேரம் சுதந்திரமாக பேச முடியவில்லை, சுதந்திரமாக பாட முடியவில்லை.

அண்மையில் கூட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு மாணவன், ஒரு இளைஞன், அவர் தன்னுடைய சுயமாக இயற்றிப் பாடிய ஒரு பாடலை சிங்கள மொழியிலே அதற்கு பல வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு, இன்று அவர் கைது செய்யப்பட்டு 16 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவ்வளவு தூரம் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீதான இனவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

அரசுகள் மாறி இருக்கின்றன. அது மஹிந்தவாக இருக்கலாம், சந்திரிகாவாக இருக்கலாம், அல்லது ரணில் மைத்திரி அரசாக இருந்தால் என்ன, இப்பொழுது அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கூட அதே இனவாதத்தையும், அதே இனவாத நோக்கிலான செயல்பாடுகளையுமே முன்னெடுக்கிறது. பௌத்த குருமார்கள் பிழைவிட்டால் அவர்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்கப் போவதாக, நீதிமன்றத்தையே கேள்விக்குட்படுத்தி இருக்கின்ற அநுர குமார அரசினுடைய நடவடிக்கைகள், ஜீவந்த பீரிஸ் போன்றவர்களுடைய நடவடிக்கைகளை, கருத்துக்களை புறந்தள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே, ஜீவந்த பீரிஸ் அவர்களுடைய கருத்து, அருட்தந்தை அவர்களுடைய அந்த செய்தியை நாங்கள் தமிழ் மக்கள் மீது அவர் கொண்டிருக்கிற கருணையும், தமிழ் மக்களுக்கு நடந்த அவலங்களைச் சொல்லுகின்ற ஒரு செய்தியாகவும் நாங்கள் அதனைப் பார்க்கிறோம். அவருக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். அவர் மீது அரசாங்கமோ, அரச தரப்போடு இருக்கின்றவர்களோ செய்கின்ற பிரச்சாரங்கள், கால்புணர்ச்சி தொடர்பான செய்திகளை முதலிலே நிறுத்த வேண்டும். உண்மைகளை வெளியிலே கொண்டுவருகின்றவர்களை உண்மையோடு சேர்த்துப் பார்க்கின்ற ஒரு வரலாற்றை அவர்கள் உருவாக்க வேண்டும்.

ஆகவே, ஜீவந்த பீரிஸ் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கு எதிராக இன்னொரு அருட்தந்தையும் தன்னுடைய இனவாத கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இருந்தாலும் கூட ஆயர்களுடைய எண்ணம், கருத்து ஒரு மிகத் தெளிவாக வர வேண்டும். அது எங்கள் மக்களுக்கான நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் ஒருநாள் நிரூபிக்கும் வரையில் நாங்கள் தொடர்ந்து அதற்காகப் போராடுவோம். அதற்கான ஆதாரங்களும் செய்திகளும் இன்னும் உலகத்திலே எல்லோரிடமும் உண்டு. அந்த வகையிலே எங்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் ஜீவந்த பீரிஸ் போன்ற அருட்தந்தையர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லுகின்ற, மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள், கருத்துக்களுக்கு நாங்கள் எப்பொழுதும் அவர்களோடு கூட இருப்போம் என்பதை மீண்டும் நாங்கள் வலிமையாகப் பதிவு செய்கின்றோம் என்றார்.

சிறப்புச் செய்திகள்