இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் மிகவும் பயங்கரமானதாக இந்த நாட்டிலே இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலே வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்சன் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த நாட்டிலே ஒரு பாடல் பாடியதற்காக, ஒரு காலத்தின் செய்தியை கண்ணாடியாக சொல்லுகின்ற ஒரு கலைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார். இது மிகவும் வரலாற்றிலே ஒரு துயரமான சம்பவம்.
உங்களுக்குத் தெரியும் கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இந்த நாட்டில் 78 ஆம் ஆண்டிலே கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் என்பது சிங்கள இளைஞர்களையும் தமிழ் இளைஞர்களையும் மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று அரசமைத்திருக்கிற ஜே.வி.பி (JVP) / என்.பி.பி (NPP) ஆக இருக்கலாம், அவர்கள் மாற்றம் பெற்றிருந்தாலும் கூட, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் மிக மோசமாக படுகொலை செய்யப்படுவதற்கும் இந்த நாட்டிலே மிக மோசமாக அழிக்கப்படுவதற்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்போது இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தைச் சேர்ந்த ஜே.ஆர். ஜெயவர்தன, பிரேமதாசா போன்றவர்கள் மிக கொடூரமாக அதனை பயன்படுத்தி இருந்தார்கள்.
கொடூரமான இந்த சட்டத்தை நீக்குகிறோம் என்று பலமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உட்பட உங்களுடைய அரசாங்கம் பல தடவைகள் இந்த செய்தியைச் சொல்லியிருந்தார்கள் . “நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே வந்தவுடன் நீக்குவோம்” என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடக்கப் போகிறது, இதுவரை இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. அதற்கான ஒரு புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ஒரு கோடு இருக்கிறது, அதற்கு இன்னொரு பெரிய கோட்டை கீறுகிறீர்களே தவிர, அதனை நீக்குகின்ற நிலையில் இல்லை.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாகத்தான் இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மிகக் கொடுமைகளை சந்தித்தார்கள். 2006 ஆம் ஆண்டு, 2009 ஆம் ஆண்டு காலங்களில், குறிப்பாக 2006 கிழக்கு மண்ணினுடைய வாகரையிலே நடந்த மிகப்பெரிய இறுதியான இனப்படுகொலைகளும், 2009 ஆம் ஆண்டு வடக்கு மண்ணிலே முள்ளிவாய்க்காலிலே நடந்த இனப்படுகொலைகளுக்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மிக காரணமாக இருந்தது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி இன்று கணேஷ்குமார் சங்கீத்சன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு பாடல் பாடி இருந்தார். இந்த நாட்டிலே பாடுகின்ற உரிமை தடுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி என்றால் இந்த சபையிலே நீங்கள் சொல்ல வேண்டும், பேசுகின்ற உரிமை தடுக்கப்பட்டிருக்கிறதா? தீபச்செல்வன் புத்தகங்களை எழுதியிருந்தார், இந்தியாவிலிருந்து வந்த புத்தகங்கள் சுங்க திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. எழுதுகின்ற உரிமை தடுக்கப்பட்டிருக்கிறது, பாடுகின்ற உரிமை தடுக்கப்படுகிறது, கூட்டம் கூடுகின்ற உரிமை தடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்தே நீங்கள் இதனை செய்கின்றீர்கள்.
அதனை இன்னும் மெருகூட்டுவதற்காக இன்றைய சட்டமூலத்தையும் ஜனாதிபதி தனக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி இதனை செய்கின்றார். ஜனாதிபதி ஏன் தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி சங்கீத்சன் ஏன் விடுதலை செய்யவில்லை? தொடர்ந்தும் சங்கீத்சன் என்கின்ற ஒரு சாதாரண இளைஞன், ஒரு பாடகன், ஒரு கலைஞனை விடுவிக்கச் சொல்லி பல இடங்களிலும் மக்கள் போராடுகின்றார்கள். நேற்று காலை வவுனியாவில், நேற்று வல்வெட்டித்துறையில், அதற்கு முதல் கிளிநொச்சியில் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் திரண்டு திரண்டு போராடுகிறார்கள்.
இப்பொழுதும் நான் இந்த இடத்திலே உயர்ந்த சபையிலே சொல்லுகிறேன், நீங்கள் அவர்களை விடுவிக்கவில்லையானால், சங்கீத்சன் அவர்களை உடனடியாக இந்த அரசு விடுவிக்கவில்லை என்றால், வடக்கு கிழக்கு தழுவி ஒரு மாபெரும் போராட்டத்திற்கு மக்கள் தயாராகிறார்கள். இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், பேச முடியாமல் இருக்கிறார்கள். அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து அபிவிருத்தி என்ற வார்த்தைகளை நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் அபிவிருத்தி என்பது நடந்ததாக தெரியவில்லை. கைதுகளும் அடக்குமுறைகளும் இந்த நாட்டிலே மிகக் கோலோச்சி மேலோங்கி இருக்கிறது.
அண்மையிலே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக இருந்த அலெக்ஸ் ராஜா இரண்டு மாதங்களில் திடீரென பதுளை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அலெக்ஸ் ராஜா நீதவான் நியமிக்கப்பட்டு அவர் சில வழக்குகளை முன்னிலைப்படுத்துகின்ற பொழுது, நீதியான நீதவான்கள் உடனடியாக கலைக்கப்படுகிறார்கள். இதேதான் முல்லைத்தீவில் இருந்த நீதவான் சரவணராஜா அவர்களுக்கும் நடைபெற்றது. ஆகவே நீங்கள் கொண்டு வருகிற சட்டம் மக்களுக்கான சட்டம், நீதிக்கான சட்டம் என்பது நீதித்துறையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது.
குறுந்தூர் மலையிலே விகாரை கட்ட வேண்டாம் என்று நீதிமன்றம் கட்டளையிட்ட பிற்பாடும், பிக்குமார்களால் அங்கே நீதிமன்ற கட்டளையை மீறி அந்த இடத்திலே விகாரை கட்டப்பட்டது. அரசாங்கத்தினால் இதுவரை அதனை தடுக்க முடிந்திருக்கிறதா? அதனை தடுக்க முயன்ற நீதவானை பழிவாங்கினீர்கள். அவர் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைக்கு நீதியரசர் சரவணராஜா நாட்டை விட்டே போனார். அலெக்ஸ் ராஜா தீர்ப்பு வழங்குகின்ற பொழுது, நீதியை வழங்குகிற பொழுது, நீதிக்குப் புறம்பாக ஒரு கோரமான அகோரமான ஆட்சிக்காக அவரை யாழ்ப்பாணத்திலே இருந்து நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வன்முறை. இந்த நாட்டில் நடைபெறுகின்ற மிகவும் மோசமான ஒரு காரியம். குறிப்பாக யாரும் பேச முடிவதில்லை.
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, எனக்கு தெரிந்த அளவிலே யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி மாணவர்கள் ஒரு விளையாட்டுப் போட்டிக்கு சோடனை (அலங்காரம்) செய்திருந்தார்கள். அந்த சோடனைக்காக அந்த பாடசாலையினுடைய அதிபர் பரதன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதேபோலதான் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய கோணாவில் மகா வித்தியாலயத்திலே விளையாட்டுப் போட்டியிலே சோதனைகள் செய்திருந்த காரணத்தால், அந்த பாடசாலையினுடைய அதிபர் அம்பிகைபாகன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
ஒரு பாடசாலையின் விளையாட்டுப் போட்டியிலே சோடிக்க முடியாது. பாடசாலை விளையாட்டுப் போட்டி நடத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம், பாடினால் பயங்கரவாத தடைச்சட்டம், பேசினால் பயங்கரவாத தடைச்சட்டம், ஒன்று கூடினால் பயங்கரவாத தடைச்சட்டம். இந்த நாட்டிலே நீங்கள் என்ன நல்லிணக்கம் சொல்கிறீர்கள்? இங்கே நீதி அமைச்சர் அவர்கள் இருக்கிறார், கௌரவ அமைச்சர்கள் இருக்கிறீர்கள். தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள், இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம்.
கதிர்காமத்து அழகி பிரேமாவதி மனம்பேரி உட்பட பலரை கொன்று நிர்வாணமாக்கி ரோட்டிலே இழுத்துச் சென்று சுட்டு படுகொலை செய்த இந்த நாட்டினுடைய வரலாறு, எங்களுடைய சகோதரிகள், சகோதரர்கள் மிக மோசமாக கொல்லப்படுவதற்கும், இறுதி யுத்தத்தை கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இந்த மண்ணிலே முள்ளிவாய்க்காலில் 4 லட்சம் மக்கள் இருந்த பொழுது 75 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்று கூறி உணவு அனுப்பாமல், மருந்து அனுப்பாமல், கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அந்த மக்களை கொடூரமாக கொலை செய்த அந்த அரசியல் நிலைமை இன்றும் தொடர்கின்றது.
குறிப்பாக, “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தை நீங்கள் படித்துப் பாருங்கள், அதிலே சில விஷயங்கள் உண்டு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். அந்த அரசியல் பிழைத்ததனால் கோட்டாபய இரண்டு வருடங்களிலே வீட்டை விட்டுப் போனார். இந்த நாட்டினுடைய ஆட்சியை விட்டுப் போக வேண்டிய சூழல் அவருக்கு வந்தது. அதேபோலதான் மகிந்த ராஜபக்ஷவினால் திரும்ப வர முடியவில்லை. யோசித்து பாருங்கள்.
ஆகவே நான் மீண்டும் சொல்கிறேன், இந்த மண்ணிலே கணேஷ்குமார் சங்கீத்சனுக்கு நடந்திருக்கிற துயரம் அல்லது தீபச்செல்வனுக்கு நடந்திருக்கிற துயரம், இங்கே தொடர்ந்தும் எத்தனை பேருக்கு நடக்கப் போகிறது? இது ஒரு கட்டியம் சொல்கிறது, முதலாவது ஒரு செய்தியைச் சொல்கிறது – இனிமேலும் இளைஞர்களுடைய சுதந்திரம் அடக்கப்படுகிறது. இதுதான் இந்த நாட்டினுடைய நல்லிணக்கமா? நீங்கள் எப்படி நல்லிணக்கம் கொண்டு போகிறீர்கள்? இரண்டு ஆண்டுகளில் கண்ட முன்னேற்றம் என்ன? இந்த நாட்டினுடைய முயற்சியிலே நீங்கள் கண்ட வெற்றி என்ன?
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இந்த நாட்டிலே இப்பொழுதும் இரண்டு பட்டிருக்கிறார்கள். இரண்டு பேருமே இரண்டு தேசிய இனங்கள்தான். ஆனால் மனோரீதியாக இந்த நாட்டினுடைய தேசியக் கொடிக்கு கீழ் இன்றும் தமிழர்கள் இல்லை என்பதை மிகத் தெளிவாகவே இந்த நாடு சொல்கிறது. அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. அரச பயங்கரவாதத்தினுடைய ஒவ்வொரு செயல்களையும் நீங்கள் எடுத்துச் செய்கிறீர்கள். இதனைத்தான் ஜே.ஆர். ஜெயவர்தன காலம் கூட செய்திருந்தது. ஜே.ஆர் சொன்னார், “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று . சாதாரண நிரபராதிகளாக இருந்த மக்களைப் பார்த்து போரை அறைகூவல் செய்த ஜே.ஆருடைய தொடக்கத்தை இப்பொழுதும் கூட 50 ஆண்டுகள் கடந்து வந்தும் கூட நீங்களும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், இப்பொழுது இருக்கிற நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் அதனை கற்றுக் கொள்ளவில்லை என்றால், இந்த நாடு அதள பாதாளத்தில் போய் விழுவதைத் தவிர வேறு எதுவும் நடக்காது.
இந்த நாட்டினுடைய பொருளாதாரம் இன்னும் வளர முடியவில்லை. இந்த நாட்டினுடைய நீதியும் நியாயமும் எல்லா இனங்களுக்கும் உரியதாக இருக்க வேண்டும் . எல்லாருக்கும் உரியதாக இருக்க வேண்டும். நீதியரசர்களை நீங்கள் நினைத்தது போல் மாற்றவும், உங்களுக்கு ஏற்ற வகையில் நீதியரசர்களை நியமிப்பதும், அதனூடாக தீர்ப்புகளை வழங்குவதும் மிக மோசமானது. இதனைத்தான் அந்த குறிப்பிட்ட காலங்களில் தந்தை செல்வாவினுடைய மருமகனாக இருந்தவர், ஜே.ஆர். ஜெயவர்தனவோடு மிக நெருக்கமாக இருந்தவர் அவர் எழுதிய புத்தகத்திலே குறிப்பிட்டிருந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன ஒருமுறை சொன்னார்: “தீர்ப்புகளை நாங்கள் எங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதுவோம். நாங்கள் யாருடைய மண்டையை உடைக்க வேண்டும் அல்லது யாருக்கு என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஒரு நீதிபதிகளுக்கு கார் வாங்கிக் கொடுப்பதன் மூலம் அல்லது வீடு வாங்கிக் கொடுப்பதன் மூலம் எங்களால் தீர்ப்பளிக்க முடியும்” என்று லலித் அத்துலத்முதலியும், ஜே.ஆர். ஜெயவர்தனவும் அந்த காலகட்டங்களில் 70களில் சொன்ன வரலாறுகளை நான் மீண்டும் பதிவிடுகிறேன்
ஆகவே, ஏ.ஜே. வில்சன் எழுதிய ‘பிரேக் அப் ஆஃப் ஸ்ரீலங்கா’ (The Break-up of Sri Lanka) என்கிற புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அவர் மிகத் தெளிவாக, ஜே.ஆரோடு நெருக்கமாக இருந்த ஏ.ஜே. வில்சன் எழுதிய அந்த புத்தகத்தினுடைய ஒவ்வொரு வரிகளும் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள தலைவர்கள் செய்த அநியாயங்களை சொல்லுகிறது.
அதனால்தான் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், இந்த நாட்டினுடைய சங்கீத்சனை உடனே விடுதலை செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். இந்த உயர்ந்த சபையின் ஊடாக அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்திருக்காதீர்கள் என்றார்.