June 10, 2026

இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சந்தித்து, நன்றி தெரிவித்த சிறீதரன் எம்.பி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரான டாக்டர் சிரி வோல்ட் (Dr. Siri Walt) அவர்களை சந்தித்து, அவரது பணிக்கால சேவைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் தொடர்பாக தூதுவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக சிறீதரன் எம்.பி. தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கிக் கௌரவித்தார்.

தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வை எட்டும் நோக்கில் தூதுவர் டாக்டர் சிரி வோல்ட் அவர்கள் தனது பணிக்காலத்தில் முன்னெடுத்த சமாதான மற்றும் நல்லிணக்க முயற்சிகளை சிறீதரன் எம்.பி. நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அதேவேளை, தனது பணிக்காலம் நிறைவடைந்த பின்னரும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழர் இனப்பிரச்சினைக்கான நீதியான அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளுக்கு தன்னாலான பங்களிப்புகளை தொடர்ந்தும் வழங்குவதாக தூதுவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு பரஸ்பர நட்புறவையும், இருதரப்பு புரிந்துணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.