“மாணவர்களே! எப்போதும் உங்கள் வாழ்விற்கென உயரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி உறுதியுடன் நகருங்கள். உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள். ஒரு மனிதன் தன்னையும் தன் திறமையையும் நம்பத் தொடங்கிவிட்டால், எத்தகைய சக்தியாலும் அவனையும், அவன் சார்ந்த மண்ணையும் அசைத்துப் பார்க்க முடியாது,” என கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலிடம் பெற்ற சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்.

இன்று எமது மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். உங்கள் ஒவ்வொருவருடைய வெற்றியும் வெறும் தனிமனித வெற்றிகளல்ல; அவை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு வலிமையான செய்தியைச் சொல்கின்றன. “எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், எம்மால் சாதிக்க முடியும்” என்கிற நம்பிக்கையை இந்த மண்ணிற்கு நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள்.

நீங்கள் சாதனையாளர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், உங்கள் எல்லைகளை பட்டங்கள் பெறுவதோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாதீர்கள். அந்தப் பட்டங்களைத் தாண்டி, அடுத்த சந்ததி பின்தொடரக்கூடிய ஆளுமை மிக்க அடையாளங்களாக நீங்கள் வளர வேண்டும். நீங்கள் உருவாக்கும் பாதையில் நாளை ஆயிரக்கணக்கானோர் பயணிக்க வேண்டும்.
வரலாற்றில் மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் எவ்வாறு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தாரோ, அவ்வாறே நாமும் விதிகளை மாற்றியமைக்கக்கூடிய, புதிய வரலாற்றைப் படைக்கக்கூடிய ஆளுமைகளாக மாற வேண்டும்.

எமது கல்வியின் ஆளுமைகள் கடந்த காலங்களில் எத்தகைய வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டிருந்தனவோ, அதே பெருமையோடு இனிவரும் காலங்களில் நீங்களும் மிளிர வேண்டும். உங்கள் கல்விப் புலமை மற்றும் ஆளுமையின் ஊடாக தமிழ் தேசியத்தை உலக அரங்கில் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.
சாதித்த உங்களை நாம் மனதாரப் பாராட்டுகிறோம். உங்களைப் போலவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றியீட்டிய ஏனைய மாணவர்களையும் இந்தத் தருணத்தில் வாழ்த்துகிறேன்.

நாம் வறுமையின் பிடியிலும், தீராத சவால்களுக்கு மத்தியிலும் வாழ்பவர்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த வறுமை எமது அறிவுக்குத் தடையல்ல. எத்தகைய நெருக்கடியிலும் சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை கொண்டவர்களாகவே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த வீரத்தையும் விவேகத்தையும் உங்கள் முடிவுகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
எமது மண்ணின் விழுதுகளே! தொடர்ந்து முன்னேறுங்கள். உங்கள் கல்வி இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் ஒளியாக அமையட்டும்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சாதனையாளர்களுக்கான பதக்கம் அணிவித்து மதிப்பளிக்கும் நிகழ்வும், ஏனைய விருந்தினர்களின் வாழ்த்துரைகளும் நடைபெற்றன.
கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. இளையதம்பி விஜயசிங்கம் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மோகனபவன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் திரு. அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் திருமதி. இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முதல்வர் திரு. ப. ஜோயல் பியசீலன், கிளி. முக்கொம்பன் மகாவித்தியாலய முதல்வர் திரு. இராசரத்தினம் அரவிந்தன், மேனாள் அதிபர் திருமதி. ஜெயந்தி தனபாலசிங்கம், கிளிநொச்சி நகர கிராம அலுவலர், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தகப் பெருமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.