கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,
ஊர்வணிகன்பற்று கிராமமானது மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுடன், பல தலைமுறைகளாக தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடமாகப் பேணி வந்த நிலமாகும். யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை இராணுவத்தினால் இக்காணிகள் கையகப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாத துர்ப்பாக்கிய நிலையே நீடிக்கின்றது.
தற்போது இராணுவத்தின் 4வது பட்டாலியன் மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ள முப்பது(30) ஏக்கர் நிலப்பரப்பானது, இருபது தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாகும். இவ்விடத்திலேயே மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் மற்றும் அவர்களது கலை, கலாசார விழுமியங்களுடன் ஒன்றிய முத்துமாரி அம்மன் ஆலயம், பொது நோக்கு மண்டபம், சிறுவர் முன்பள்ளி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் சமூகக் கட்டமைப்புகளும் அமைந்துள்ளன. தமது பூர்வீக அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட இந்த நிலத்தை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில், கடந்த 2026.04.02 அன்று இராணுவத்தினால் நில அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன. எனினும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இப்பணிகள் அன்றையதினமே இடைநிறுத்தப்பட்டது.
இவ்விடயத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, கடந்த 2026.04.07 அன்று என்னால் நாடாளுமன்றத்தில் கௌரவ சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களையும் சபையில் பதிவு செய்திருந்தேன். தொடர்ந்து அன்றையதினம் மாலை 02.00 மணிக்கு தங்களின் தலைமையில் பாராளுமன்ற குழு அறை 01 இல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்திலும் இக் காணி விடயம் தொடர்பில் தங்களுக்கு தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. “மக்களின் நிலம் மக்களுக்கே” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் நின்றும், மக்களின் நலன் சார்ந்தும் செயற்பட்டு வரும் தாங்கள் தமிழ் மக்களின் இப்பூர்வீக சொந்த நிலத்தை விடுவிப்பீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையினை கொண்டுள்ளனர். தமது சொந்த நிலங்களை இழந்து, தற்போது வாழ்வாதாரத்திற்காகக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு அறத்தின்பாற்பட்ட நீதி வழங்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே, இக்காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான தமிழ் பொது மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்க எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, காணியின் உண்மையான உரிமையாளர்களான தமிழ் பொது மக்களிடமே இக்காணியினை வழங்க ஏற்பாடு செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.