தமிழ்த் தேசிய மே நாள் பிரகடனம்- 2026

​”யாமார்க்கும் குடியல்லோம்” என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நிகழ்த்திய மே நாள் பிரகடனப் பேருரையின் முழு வடிவம்.

தமிழ்த் தேசிய மே நாள் பிரகடனம்- 2026

‘உழைப்பு, உயர்வு, உயர்தர வாழ்வு, பொருளாதாரப் பெருக்கம்’ என்ற கூட்டு எண்ணக்கருவின் பெறுபேறாக உருவாகிய மே நாள்; இன்று உலகனைத்தும் கொண்டாடப்படுகிறது. மனித குலத்தின் மாண்பாக விளங்குகின்ற உழைப்பு என்னும் உன்னத அடையாளமே தனிமனித கௌரவத்தை மாத்திரமன்றி தேசங்களினுடைய பெறுமதியையும் வெளிக்காட்டி வருகின்றது.

வெறும் வரட்டுவாத சிந்தனைகளுக்குள்ளும், வன்ம உணர்ச்சிகளுக்குள்ளும் அகப்பட்டு அந்தரித்த முதலாளித்துவத்தின் பாகுபாடுகளும், பாரபட்சங்களும் ஏராளமானவை. ஆதிக்கத்திற்கும், அடிமைத்தனத்திற்கும் இடையே பிரிந்து நின்று போராடுகின்ற சுகம் அலாதியானது. நிர்ப்பந்திக்கப்பட்ட போராட்டங்களே நிகழ் உலகின் நியாயத்தன்மையை நியாயத்தராசில் இட்டு வெற்றிகண்டிருக்கின்றன. சுரண்டுபவர்களும், அவர்களால் சூறையாடப்பட்ட வளங்களும் தம்மை வல்லாதிக்க ஆட்சியென்று வர்ணிக்கவும், கர்வம் கொள்ளவும் அவையே காரணமாயிருந்தன.
யுகப் புரட்சியென்றும், தொழிலாளர் புரட்சியென்றும், சமூக விடுதலை என்றும், சமதர்ம உருவாக்கம் என்றும் மனுக்குலம் கிளர்ந்தெழுந்து தமது சமூகங்களின் இருப்பையும், தொழில் குல சமூகங்களின் பொறுப்பையும் வெளிப்படுத்திய நாளாகவே உலகத் தொழிலாளர் நாள் விளங்குகின்றது. நெறிமுறைகளுக்கு உட்பட்ட உழைப்பும், நேரம் தவறா அர்ப்பணிப்பும், ‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்ற சுதந்திர மன உணர்வும் தொழிலாளர் வர்க்கத்திடம் நிலைபெறுகின்ற போதே தொழிலில் புதுமையும், புரட்சியில் மகிமையும் ஏற்படுகிறது. அத்தகைய நாளே உலகத் தொழிலாளர்களின் இன்றைய திருநாளாகும்.

அன்பார்ந்த தொழிலாள உறவுகளே…!

இரத்தமும் சதையுமாகி, வலியும் வாழ்வுமாகி உருப்பெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பில் துயரும் துவழ்தலும் நீண்டே வந்திருக்கிறது என்பது உவப்பற்ற உண்மைச் செய்தியாகும். தனியுரிமை என்றும், தன்னாட்சி உரிமை என்றும், சமத்துவம் என்றும், சத்திய உலகம் என்றும் நல்விதி வாக்கியங்களை நயமாகப் பேசுகின்ற உலக சமுதாயத்தில்; இன்று உலகத் தொழிலாளர் நாள்.

வாழ்த்துச் செய்திகளும், வர்ண வேடிக்கைகளும், மகிழ்ந்தோங்கும் மன்ற நிகழ்வுகளும், அரச தலைவர்களின் அரியணைச் செய்திகளும், அலங்கார அறிக்கையிடல்களுமாக அகமகிழ்ந்திருக்கிறது அகிலம். யுரேனியம் தேடுகின்ற வேட்டையில் சிக்கித் தவிக்கின்றது தொழிலாளர் சமூகம். பூமிப்பந்திலும், வான்பரப்பிலும், சமுத்திரத்தின் சர்வ பகுதிகளிலும் போர்த் தீ எழுந்து நர்த்தனமாடுகிறது. நானா? நீயா? என்ற நயவஞ்சக மேலாதிக்கத்தில் இறுமாப்பு அடைந்துள்ள வல்லரசுத் தலைவர்களின் பல்லாயிரம் படையணிகள் போர்க்களத்தில் சூழ்ந்துள்ள பசுமை உலகில் உலகத் தொழிலாளர்கள் மகிழ்ந்திருப்பது காலக்கனவே அன்றி வேறில்லை.

இன, மொழி, மத பேதமற்று உலக மனுக்குலம் அடங்கிப் போயிருக்கும் சூழலில் இந்த மே நாள்ப் பிரகடனம் நெஞ்சை நெருக்குகிறது.

உலகு விசித்திரமான நவீன யுகத்துள் பிரவேசித்திருக்கிறது. AI யுகம் பற்றிய வண்ணக் கனவுகள் வாலிப உலகுக்குள் புகுந்திருக்கின்றன. உழைக்கும் வர்க்கத்தின் உற்சாகத்திற்கும், உலகத் தொழில்நுட்பத்தின் உயர்விற்கும் AI உதவும் என்று உலகுக்குச் சொன்னவர்கள் யூரோவையும், பவுண்ட்சையும், டொலரையும் மெய்ப் பெறுமானம் இழக்கச்செய்து பூமிப்பந்தில் முகமிழந்து போகின்றனர். அறிவுக்கும், உழைப்புக்கும், தொழில்நுட்பம் என்கின்ற பெறுமானத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற யுரேனியம் நோக்கிய போர் உலகத் தொழிலாளர்களை அடக்கி, அடிமைப்படுத்துகின்ற நாலாம் விதியாக நானிலத்தில் நீள்கிறது.

அன்பார்ந்த தொழிலாள உறவுகளே…!

இத்தகைய உலக சூழமைவில் சர்வதேச சவால்களையும், பிராந்தியத்தின் பிணக்குகளையும் எதிர்கொண்டவாறு இலங்கைத் தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அகமெங்கும் துளிர்த்த நம்பிக்கைப் பலத்தினை சரிவடையச் செய்திருக்கிறது.
பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலைகளில் இருந்து முற்றிலும் வெளிவர முடியாத புதிய அரசு பதவிக்கு வந்திருக்கிறது. சேகுவேராவையும், லெனினையும் முன்னே பிடித்தபடி மாக்சிச கருத்துகளை விதைத்தவாறு புதிய யுகம் நோக்கிய பயணம் என்ற அழகிய கோசங்கள் அரங்கேறி வருகின்றன.

சிங்களவர்களைப் போலவே தமிழர்களும் ஓர் தேசிய இனத்தவர்கள் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித குலத்திற்கே அவமானம் என்றும் பேசிய நாக்குகள் தளர்வடையத் தொடங்கியுள்ளன. புதிய அரசியல் கலாசாரம் என்கின்ற கனவு பழைய பந்திக்குத் திரும்பியிருக்கிறது. அரசியல் தீர்வுமின்றி, வாழ்வாதார மாற்றங்களுமின்றி வாழ்வில் அந்தரகரமான பொழுதுகளையே தமிழர்கள் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பல்லாயிரக் கணக்கான குடியிருப்பு நிலங்கள் படையினர் வசமே உள்ளன. கனிய வளங்களும், காட்டு வளமும் வளப் பாதுகாப்பு என்ற பேரில் அதற்குரிய திணைக்களங்களினால் ஆட்சியாளர்களின் அனுபவிப்புக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றன. கடல்வள மேலாண்மை அயலக மீனவர்களிடமும், கட்டுக்கடங்கா சிலரிடமும் அகப்பட்டு அந்தரிக்கிறது. எமது மீனவர்கள் சுய தொழிலையும், சுய பொருளாதாரத்தையும் அடைய முடியாத அளவுக்கு நாட்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விலைச் சமநிலை, கால விலையேற்றம், உற்பத்திச் செலவு, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் நிலையான முகாந்திரமும், முகாமைத்துவமும் இன்றி தமிழ் விவசாயிகள் பேரிடர் படுகின்றனர். முதலீட்டாளர்களும், புலம்பெயர்ந்தோரும் தங்கள் நிலங்களின் வளங்களை ஆள முடியாமல் புலி அடையாளம் பொறிக்கப்படுகின்றனர். விளைநிலங்கள் மீது விகாரைகளும், தமிழர் விவேகத்தின் மீதும் எழுத்துலக ஆளுமைகள் மீதும் தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்த விசைக் குறைப்புமின்றி வீரியம் பெற்றே இருந்து வருகிறது. அஞ்சுதலும், அடிபணிதலும் அரச சேவையாளர்களிடையே விரவிக் கிடக்கிறது.

அரசியல் தீர்வு என்றும், வடகிழக்கு தமிழர் தேசத்திற்கு அதிகாரப் பகிர்வு என்றும், விரைவில் மாகாண சபைத் தேர்தல் என்றும் போட்ட முழக்கங்கள் முனகிச் செல்கின்றன. தினக்கூலிகள் தினக்கூலிகளாகவே, காணியற்றவர்கள் காணியற்றவர்களாகவே, வீடற்றவர்கள் வீடற்றவர்களாகவே இருக்க எமது நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரத்தால் நலிந்து வீழ்ந்து கிடக்கிறது.

‘யாமார்க்கும் குடியல்லோம், எவர்க்கும் அஞ்சோம்’ என்ற தைரியமும் தன்மானமும் தவிர வேறெந்த ஆசைகளும் இன்றிய காலநதியில் நம்பிக்கை ஒன்றையே பலமாகக்கொண்டு எங்கள் நிலம் எமக்கே வேண்டும் என்றும், எம்மை நாமே ஆள வேண்டும் என்றும் உள்ளத்தில் எரியும் சுயநிருணயக் கோரிக்கை ஒன்றைத் தவிர அந்த இலட்சியத்தை அடைந்துகொள்வோம் என்ற தீராத திடசங்கற்பத்தைத் தவிர எமது ஈழத்தொழிலாளர்களின் மீட்சிக்கு வழி ஏதும் இல்லை என்பதே இன்றைய மே நாள்ப் பிரகடனத்தின் பிரதான செய்தியாகும்.

சிறப்புச் செய்திகள்