யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என பிரதேச வைத்திய அதிகாரியிடம் அவர் உறுதியளித்தார்.

இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரி (DMO) மருத்துவர் க.சசிதரன், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் திரு சுபாதரன், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திரு நவநீதன் வலிகாமம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு ஆதவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு சபேசன், சங்கானை பட்டின அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு குணசிறி, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும் சிறீதரன் எம்.பியின் வட்டுக்கோட்டைத் தொகுதி இணைப்பாளருமாகிய திரு சசிதரன், வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு குமணன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட இணைப்பாளர் திரு செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
