சுதந்திரமாக பேச முடியவில்லை, சுதந்திரமாக பாட முடியவில்லை. அண்மையில் கூட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு மாணவன், ஒரு இளைஞன், அவர் தன்னுடைய சுயமாக இயற்றிப் பாடிய ஒரு பாடலை சிங்கள மொழியிலே அதற்கு பல வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு, இன்று அவர் கைது செய்யப்பட்டு, 16 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவ்வளவு தூரம் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீதான இனவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இப்பொழுதும் தமிழர்கள் இங்கே மெல்ல மெல்ல இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களுக்கான தொழில் முறைகள் இங்கு இல்லை. இங்கு இருக்கின்ற ஒவ்வொரு இளைஞன், யுவதியும் வெளிநாடு பற்றியே சிந்திக்கக் கூடிய அளவுக்கு, அல்லது இந்த நாட்டிலே இருக்க முடியாத அளவுக்கு அவர்கள் தானாகவே புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது.
அரசுகள் மாறி இருக்கின்றன. அது மஹிந்தவாக இருக்கலாம், சந்திரிகாவாக இருக்கலாம், அல்லது ரணில் மைத்ரி அரசாக இருந்தால் என்ன, இப்பொழுது அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கூட அதே இனவாதத்தையும், அதே இனவாத நோக்கிலான செயல்பாடுகளையுமே முன்னெடுக்கிறது என தெரிவித்துள்ளார்.