35 ஆண்டுகால நில ஆக்கிரமிப்பும் மீனவர்களின் அவலமும்: நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் மக்களின் குரல்! (VIDEO)

மிக முக்கியமாக கடந்த மே மாசம் 27ஆம் தேதி புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தார்கள். அந்த மீனவர்களிலே நான்கு பேர் இதுவரை இன்னும் வீடு திரும்பவில்லை. அரசாங்கத்தினால் அவ்வாறு சென்றவர்களை கொண்டு வருவதற்கான, தேடி கண்டுபிடிப்பதற்கான சரியான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே அந்த பகுதி எங்களுடைய மீனவ சகோதரர்கள் எங்களிடம் முறையிட்டுருக்கிறார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக சிமியாம்பிள்ளை சுஜித்குமார் (37 வயது), கதிர்காமம் சோதிலிங்கம் (52 வயது), பாலசூரியமூர்த்தி ராமகிருஷ்ணன் (53 வயது), ராமகிருஷ்ணன் ரவிராஜ் (28 வயது). இதிலே ராமகிருஷ்ணனும் ராமகிருஷ்ணனுடைய மகன் ரவிராஜ் அவர்களும் தந்தையும் மகனுமாக கடலுக்கு சென்றிருந்தார்கள். பருத்தித்துறை முனை கற்கோவளம் பகுதிகளை சொந்த இடமாக கொண்ட இந்த எங்களுடைய மீனவ சகோதரர்கள் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது, இவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இன்னும் அரசு பொறுப்போடு வெளியிடவில்லை. அரசிடமிருந்து ஒரு சரியான பதிலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நான் இந்த இடத்திலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மிக முக்கியமாக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இந்த நாட்டினுடைய உயர் பதவியிலே இருக்கின்றவர்கள் பொறுப்போடும் அந்த மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலும், காற்றிலே சிக்கப்பட்டிருந்தால் அல்லது அவருடைய வள்ளங்கள் கவிழ்ந்திருந்தால் அல்லது ஏதாவது நாடுகளில் அவர் கரை ஒதுங்கி இருந்தால் என்ன நடந்தது என்பதை கண்டறியப்பட வேண்டும். அந்த குடும்பங்கள் நிற்கதியாக இருக்கின்றன. அந்த குடும்பங்களுக்கான நிவாரணம் என்ன, அவர்களுக்கான நல்ல செய்தி என்ன என்பதை அரசாங்கம் சொல்ல வேண்டும். இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உயர்ந்த சபையின் ஊடாக நாட்டினுடைய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் ஏனையோரை நான் மிக மரியாதையோடு கேட்கிறேன், இந்த மக்களுக்கான பதிலை விரைவாக நீங்கள் தர வேண்டும் என்று.

அதேபோல அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் இந்த நாட்டிலே நடந்த ஒரு இனப்படுகொலை தொடர்பிலே கடந்த மே மாசம் 18ஆம் தேதி கொழும்பிலே நடந்த வணக்க நிகழ்வின் பொழுது தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த நாட்டிலே இவ்வாறு ஒரு பெரிய இன அழிப்பு நடந்தது, தொடர்ந்தும் அது நடந்து கொண்டேதான் இருக்கிறது; ஆகவே இந்த நாடு அதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும், இந்த நாட்டிலே அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையிலே அவர் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

ஆனால், அவரை ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜீவந்த பீரிஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கொடுத்த குரலுக்காக, கிறிஸ்தவ அமைப்பு கூட — இந்த நாட்டினுடைய கர்தினால் தலைமையிலான கிறிஸ்தவ அமைப்பு கூட — அவரை கண்டிக்கிற அளவுக்கு அல்லது அந்த கிறிஸ்தவ அமைப்பு அவரை ஒரு இம்சிக்கிற அளவுக்கு தன்னுடைய நிலையை மாற்றி இருக்கிறது. இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதற்கு அப்பால் ஒரு கிறிஸ்தவ பௌத்த நாடா என்று கூட யோசிக்கிற அளவுக்கு கர்தினாலும் அவருடைய சபையும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நாங்கள் பார்க்கிறோம்.

மிக முக்கியமாக ஈஸ்டர் தாக்குதலுக்காக இன்றுவரை குரல் கொடுக்கின்ற இந்த நாட்டினுடைய கர்தினால் அவர்களும் அவருடைய சபையை சார்ந்தவர்களும், ஏன் இந்த நாட்டிலே இவ்வளவு மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்வதற்கு இன்னும் தயக்கம் காட்டி இருப்பதுதான், தமிழ் மக்களாகிய எங்களுக்கு இந்த கத்தோலிக்க, இந்த கிறிஸ்தவ அமைப்பின் மீதான மிகப்பெரிய சந்தேகத்தை தருகின்றது.

குறிப்பாக மன்னாருடைய ஆயராக இருந்த மறைந்த ராயப்பு யோசப் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் தன்னுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக ஆதாரபூர்வமாக கொடுத்திருந்தார். ஆனால் அவர் வெளியிலே வந்து சொன்னார், கடந்த எட்டு மாதங்களில் (2008ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை) முள்ளிவாய்க்கால் வரை கொண்டு செல்லப்பட்ட மக்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்; இது ஒரு வெளிப்படையான இன அழிப்பு, இதற்கான நீதி என்ன என்பதை அவர் வெளிப்படையாக கேட்டிருந்தார். அவர் காலமாகி இறந்துவிட்டார். அமரரான அவருடைய அந்த கூற்றுக்கள் இன்றும் உலகத்தில் இருக்கின்றன.

ஆனால் இதுவரை அதற்கான ஒரு நல்ல செய்தியை சொல்வதற்கு கத்தோலிக்க திருச்சபை சரியாக இல்லை. தன்னுடைய நீதியை நிலைநாட்ட அவர்கள் இயேசு பிரான் வழியிலே தயாராக இல்லை என்பதைதான் இன்றும் கூட நாங்கள் பார்க்கிறோம். அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் முன்வைத்த நல்ல முன்மாதிரியான கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமானத்தோடும் மனிதாபிமான கண்ணோட்டத்தோடும் தன்னுடைய கருத்துக்களை சொல்லி இருப்பதும், இந்த நாட்டிலே இது ஒரு மிக முக்கிய விடயம், இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டிருப்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திலே கிட்டத்தட்ட 90 ஆம் ஆண்டு மக்கள் மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். 90 ஆம் ஆண்டிலே இடம்பெயர்ந்த மக்களுடைய வரலாற்றை நீங்கள் சிந்தித்து பாருங்கள்; அவர்களுடைய வரலாறு இன்னும் அந்த இடத்திற்கு திரும்ப முடியாமல் இருக்கிறது. ஒரு வெள்ளிக்கிழமை வருகிற 15ஆம் தேதி வந்தால் அவர்கள் வெளிக்கிட்டு 35 ஆண்டுகளை பூர்த்தி செய்த காலகட்டம் ஆகும்.

அந்த காலகட்டத்திலே அவர்கள் கேட்கிறார்கள், “நாங்கள் இந்த மண்ணிலே இருந்து எங்களை துரத்தி அடித்தார்கள், கலைக்கப்பட்டோம்” என்று. ராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டார்கள். 90 ஆம் ஆண்டிலிருந்து இன்றைக்கு வரைக்கும், 35 ஆண்டுகளை பூர்த்தி செய்து அவர்கள் அந்த மண்ணுக்கு இன்னும் சொந்தம் செய்யாமல் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் இப்பொழுது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மயிலிட்டியிலே ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். மயிலிட்டியிலே அவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டம், “எங்களுடைய நிலத்தை எங்களிடம் தாருங்கள்” என்பதாகும்.

அவர்கள் அந்த போராட்டம் நடத்துகின்ற நிலத்துக்கு முன்னாலே அவர்களுடைய சொந்த நிலம் இருக்கிறது. அதிலே ராணுவம் தோட்டம் செய்கிறது. அவர்கள் காடாக அடைத்து வைத்திருக்கிறார்கள், ராணுவம் குடியிருக்கவும் இல்லை. ஆனால் ராணுவம் யாழ்ப்பாணத்திலே சலூன் நடத்துகிறது, ராணுவம் கடைகளை நடத்துகிறது, ராணுவம் மக்களுடைய காணிகளில் தோட்டம் செய்கிறது. தோட்டம் செய்த மரக்கறிகளை சந்தையிலே கொண்டு வந்து ராணுவம் விற்கிறது. ராணுவம் முன்பள்ளிகளை நடத்துகிறது. இன்னும் இந்த நாட்டிலே இந்த நிலை மாறவில்லை.

அதனால்தான் நாங்கள் கேட்கிறோம், இந்த அரசு மாறியும் கூட, ஜனாதிபதி வலிகாமம் வடக்குக்கு வந்து நடைபெறுகின்ற பொழுது கூட, “மக்களுடைய காணிகளை விடுவியுங்கள், அந்த மக்கள் அந்த இடங்களிலே குடியேற விடுங்கள்” என்று கேட்டபொழுது, இங்கே நீங்கள் ‘டித்வா’ புயலை பற்றி பேசுகிறீர்கள், அரிசி விலை பற்றி பேசுகிறீர்கள், பொருளாதாரத்தினுடைய நிலை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் தங்களுடைய மிக உற்பத்தியை தரக்கூடிய அந்த மயிலிட்டி போன்ற இடங்கள் — தையிட்டி, மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, வசாவிளான், தோலகட்டி போன்ற இடங்களிலே மக்கள் கொடி முந்திரி, திராட்சை செய்கையிலே வெற்றி பெற்ற இடங்கள், வெற்றிலை செய்கையிலே வெற்றி பெற்ற இடங்கள், மரக்கறி செய்கையிலே வெற்றி பெற்ற இடங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது நாலு அல்லது ஐந்து பார ஊர்திகளில் (Trucks) தம்புள்ளை சந்தைக்கு மரக்கறிகளை அனுப்பி வைத்த மக்கள் அந்த மக்கள். ஆனால் இன்று தாங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தெருக்களிலே காத்திருக்கிறார்கள். இன்றைக்கு இவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இந்த நாடு, இந்த நாட்டினுடைய தலைமை, இந்த நாட்டினுடைய அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மிகக்கூடிய வேதனையானது.

ஆகவே தயவுசெய்து இந்த நாட்டினுடைய பொறுப்பு வாய்ந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், ஒரு நியாயமான மனிதாபிமானத்தை நேசிக்கின்ற நீங்கள், நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற நீங்கள், அந்த மக்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள்.

இந்த பாராளுமன்றத்திலே கௌரவ உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜை பற்றி பேசிவிட்டார் என்று நேற்று பாராளுமன்றத்திற்கு வழியிலே கொஞ்ச பேர் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இந்த நாட்டிலே மக்கள் சொந்த இடத்துக்கு இன்னும் போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அகதிகளாக யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள், உறவினர் நண்பர் வீடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதும் ராணுவத்துக்காக ‘உயர் பாதுகாப்பு வலையம்’ என்ற போர்வையிலே அந்த காணிகளை இந்த நாட்டினுடைய ராணுவம் பிடித்து வைத்திருக்கிறது என்று எந்தவொரு சிங்கள பொதுமகன் அல்லது எந்த சிங்கள சகோதரன், சிங்கள சகோதரி போராட முன் வருவார்கள்? அப்படி வந்தால் இந்த நாட்டிலே அவர்களுக்கும் இனவாதம் சொல்லுவார்கள்.

ஆகவேதான் நாங்கள் கேட்கிறோம், நாங்கள் முன்வைக்கிறோம், மயிலிட்டியிலே இருக்கிற மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த மக்களுடைய காணிகளை உடனே விடுவியுங்கள். அந்த மக்களுக்கு அடிக்கடி போய் பொய் சொல்ல வேண்டாம். மாறி மாறி உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பொய் சொல்வதை விட, அந்த மக்களுடைய காணியை உடனே விடுவியுங்கள். அந்த மயிலிட்டி, தையிட்டி, தோலகட்டி, வசாவிலான், பலாலி போன்ற அந்த தங்களுடைய இடங்களிலே சென்று குடியேற அனுமதியுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

சிறப்புச் செய்திகள்