“ஈழத் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது வெறும் நோய் தீர்க்கும் கலை மட்டுமல்ல; அது எமது மண்ணோடும், மரபோடும், இயற்கை வளங்களோடும் பிணைக்கப்பட்ட எமது தனித்துவ அடையாளத்தின் பிரிக்க முடியாத ஒரு குறியீடாகும்” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார்.

”மருத்துவத்துறையில் நாம் அடையும் இத்தகைய சுயாட்சியானது, எமது ஒட்டுமொத்த அரசியல் விடுதலைக்கான பயணத்திற்கு ஒரு பலமான அடித்தளமாக அமையும். அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் ஒரு தேசிய இனம், தன் சொந்தக் காலில் நிற்பதற்கான கட்டுக்கோப்பை முதலில் தன் வாழ்வியலிலும் ஆரோக்கியத்திலும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த மருத்துவமனை எமது மக்களின் உடல்நலனைப் பேணுவதோடு நின்றுவிடாமல், எமது பாரம்பரிய மருத்துவக் கோட்பாடுகளைப் பாதுகாத்து வளர்க்கும் ஓர் அறிவு மையமாகவும் திகழ வேண்டும். எமது மண்ணின் வளங்களைக் கொண்டு எமக்கான தீர்வுகளை நாமே வடிவமைத்துக்கொள்ளும் இந்தச் செயல்பாடு, எமது இனம் நோக்கியே சிந்திக்கும், எமக்கான இறையாண்மையை நோக்கியே நகரும் ஒரு தீர்க்கமான அரசியல் குறியீடாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கரைச்சிப் பிரதேச சபையினால் தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தகத்தின் திறப்பு விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மருந்தகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த ஆயுர்வேத மருந்தகமானது, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பணியாளர் நவஜீவன நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா செல்வி எலிசபெத் பேக்கர் அம்மையார் அவர்களின் நினைவாக, திரு. தம்பிராஜா குருகுலராஜா அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில், கரைச்சிப் பிரதேச சபையின் 24 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு. தங்கவேலாயுதம் பிருந்தாகரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. பரமலிங்கம் சத்தியராகவன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் திரு. தம்பிராசா குருகுலராஜா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி சோபனா ராகவன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேசவாழ் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.