இன்றைய தினம் வழக்கறிஞர் திருமதி கிருணி விஜயசிங்க அவர்களால் கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவர்களின், கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counselor) ஒருவரை நியமித்தல் என்கிற இந்த பிரேரணை ஒரு காலத்தினுடைய தேவையாக நான் கருதுகிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக முக்கியமாக உங்களுக்கு தெரியும், வடக்கு கிழக்கிலே அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டுக்கு முதல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய யுத்தம் என்பது பல மாணவர்களுடைய உளவளங்களை பாதித்திருந்தது. அந்த நேரத்தில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கக்கூடிய சூழல் இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும் தமிழர் புணர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்களால் பிள்ளைகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஆனால் இன்று உலகத்தினுடைய போக்குகள் மாறியிருக்கிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள், முகநூல்கள், YouTube, WhatsApp என்று இவ்வாறான பல சமூக வலைத்தளங்களுடைய தாக்கம் இன்றைய மாணவர்களை கவர்ந்து இழுத்திருக்கிறது. அதனை விட கல்வியிலே ஏற்பட்ட சில சில கொரோனா போன்ற நோய் தாக்கங்களின் காரணங்களினால் Zoom வழியிலே கற்கலாம் என்ற ஒரு அறிமுகமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
உலகத்திலே இன்று கற்பித்தல் முறை கூட இலத்திரணியல் ஊடகங்களுக்கு ஊடாக Zoom வழியிலே பெறுகிற பொழுது, அவர்கள் அந்த Zoom வழியிலே கற்கிறது மட்டுமல்ல, அதற்கு பிற்பாடு அந்த கைத்தொலைபேசிகள் ஊடாக அல்லது தாங்கள் கற்கின்ற இலத்திரணியல் சாதனங்கள் ஊடாக சமூக வலைத்தளங்களுக்குள் போகின்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது . மாணவர்களுடைய கவனச் சிதைவு, மாணவர்களுடைய கவனக் கலைப்பான் என்பது இதன் ஊடாக மிக பாரிய அளவிலே ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்வியிலே அவர்கள் கொண்டிருக்கிற ஆர்வம், அவருடைய அக்கறை வீழ்ச்சியை நோக்கி போயிருக்கிறது என்பதைத்தான் பல்வேறுபட்ட அடைவுமட்டங்கள் சொல்லுகின்றன.
இருந்தாலும் கூட பாடசாலைகளில் ஏன் ஒரு உளவள துணையினுடைய ஆலோசனை தேவைப்படுகிறது என்றால், இது ஒரு கல்வித்துறையில் இருக்கிற மிகப்பெரிய வழிகாட்டல் முறை. உங்களுக்கு தெரியும் மின்குமிழை கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன் பாடசாலையிலே படிக்க முடியாது என்று ஆசிரியர்கள் வெளியிலே விட்டபொழுது, அவரை “நீ ஒரு சிறந்த மாணவன், உனக்கேற்ற பாடசாலை இங்கு இல்லை” என்று அவருடைய மனதை தேற்றி, அவருக்கு ஒரு உளவள ஆலோசகராகவும் ஆசிரியராகவும் அவரை வழிநடத்திய தாய், அவரை இந்த உலகத்தினுடைய ஒரு பெரிய விஞ்ஞானியாக மாற்றினார்.
ஆகவே உளவள ஆலோசனை என்பது ஒரு சமூகத்திலே வாழுகின்ற மாணவர்களுடைய மனங்களில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கக்கூடியது, அது ஒரு தைரியத்தை கொடுக்கக்கூடியது. அந்த உளவள ஆலோசனை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய மூத்த பேராசிரியராக இருந்த சபா ஜெயராஜா அவர்கள் இதனை ஒரு புதிய வடிவம் கொடுத்தார். ‘சீர்மியம் உளவியல்’ என்பதை ஒரு சீர்மிய நடவடிக்கை என்ற அடிப்படையில், மாணவர்களுக்கு அந்த சீர்மிய நடவடிக்கைகளை, உளவியல் சிகிச்சையை எவ்வாறு ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட பல யுக்திகள் உண்டு. கல்வியினுடைய பின்னொதுக்கீடு, கல்வியினுடைய ஒருங்கிணைந்த கல்வி செயல் திட்டங்கள் இவற்றை அறிமுகம் செய்து, அந்த கல்வியின் ஊடாக ஒரு கல்வி சீர்மியத்தை கொண்டு வருவதிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த பேராசிரியர், இன்று ஓய்வு நிலையில் இருக்கின்ற சபா ஜெயராஜா அவர்கள் இந்த நேரத்திலே நினைவு கூரப்பட வேண்டும். உளவியல் துறையில், உளவள ஆலோசனை துறையில் அவர் மிகப்பெரிய பங்கை ஆற்றி இருந்தார்.
இப்ப இன்றைய காலகட்டம் என்பது ஆன்மீகம் கூட பிள்ளைகளை விட்டு கொஞ்சம் தள்ளி போய்க்கொண்டிருக்கிற ஒரு காலம். ஆன்மீக ரீதியாகவும் பிள்ளைகள் வசீகரிக்கப்பட வேண்டும், அதை மதத்தளங்கள், மத நிறுவனங்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு தெரியும் எத்தனையோ சிறுமிகளை மதத்தளங்களிலே இருக்கிற மத நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். பாடசாலை சிறுமிகளை அல்லது ஆலயத்தை நம்பி செல்லுகின்ற சிறுமிகளை, பாடசாலையை நம்பி செல்லுகின்ற சிறுமிகளை மதத்தலைவர்களே துஷ்பிரயோகம் செய்கின்றதை நாங்கள் அண்மை காலங்களில் அனுராதபுரத்திலே, கொழும்பிலே பல இடங்களிலே பார்த்திருக்கிறோம் . ஆனால் அவற்றுக்காக இந்த நாட்டிலே நீதி சரியான முறையில் இல்லை. ஜனாதிபதி கூட சொன்னார் “பிக்குமார் அவ்வாறு பிழைவிட்டால் அவர்களுக்கு வேறு நீதிமன்றத்தை நாங்கள் நியமிப்போம்” என்று. ஆகவே இது ஒரு ‘சட்டத்தின் முன் எல்லோரும் சமம்’ என்ற விடயத்தை கூட தள்ளி வைத்திருக்கிறது.
குறிப்பாக மாணவர்களுக்கான இந்த உளவள ஆலோசனை, அதிலும் பருவ வயதில் இருக்கின்ற பிள்ளைகள், பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகளுக்கான பல்வேறு வகைப்பட்ட உளவள ஆலோசனைகள் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதனை கௌரவ உறுப்பினர் அவர்கள் இன்று சபைக்கு கொண்டு வந்திருப்பதும், அந்த பிரேரணையை நிறைவேற்ற வேண்டியதும் மிக காலத்தினுடைய கடமை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இது தனி ஒரு கவுன்சிலரோடு மட்டும் நிற்கக்கூடாது. ஒரு பாடசாலைக்கான ஒரு கவுன்சிலர் சட்டரீதியாக நியமிக்கப்படுகிற பொழுது, ஒரு வலயத்திற்கான உளவள உதவி கல்விப் பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும். அவருக்கான பிரம்பான ஒரு தனியான அலகு உருவாக்கப்பட்டு, அவருக்கு அந்த வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது ஒரு வெற்றிகரமானதாக, மிகவும் நேர்த்தியானதாக அது பிள்ளைகளை சென்றடையக்கூடியதாக இருக்கும். அதற்கான ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள் உருவாக்கப்படுகிற பொழுதுதான் இந்த உளவள ஆலோசனை பிள்ளைகளை நேரடியாக சென்றடையும்; அது பிள்ளைகளை வழிநடத்தக் கூடியதாக இருக்கும்.
இன்றைய நாள் இந்த கொண்டுவரப்பட்ட உளவள ஆலோசனை என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, காலத்துக்கு மிக தேவையானது. இன்றைய உலக ஒழுங்கு, உலகங்களுடைய போக்குகளிலே மாணவர்களுடைய மனநிலைகளை இனங்கண்டு அவர்களை இந்த வேலை உலகுக்குள்ளும், மாணவர்களை வெற்றிகரமான மனிதர்களாக மாற்றுவதற்கும் உளவள ஆலோசனை என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு கணித மேதை ராமானுஜத்தை இந்த உலகம் தந்தது என்றால், ஒரு மிகப்பெரிய வீரனான புரூஸ் லீயை இந்த உலகம் தந்தது என்றால், ஒரு தோமஸ் அல்வா எடிசனை உலகம் தந்தது என்றால், அது அவர்களுடைய குடும்பத்திலிருந்து வந்த உளவள ஆலோசனை, ஆசிரியருடைய ஆலோசனை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தன்னம்பிக்கை, அதுதான் அவர்களை இந்த உலகத்திலே வெற்றி மனிதர்களாக மாற்றியது.
அதனைத்தான் அப்துல் கலாம் அவர்களும் சொல்கிறார் “நீ என்னவாக நினைக்கிறாய், கனவு காண்” என்று. அந்த கனவுகள் பிள்ளைகளிடம் இருப்பதற்கு சரியான நம்பிக்கை வழங்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கைக்கான உளவள ஆலோசனை பாடசாலைகளில் மிக நேர்த்தியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை நானும் இந்த கொண்டு வந்த இந்த பிரேரணையை வழிமொழிந்து, நான் அதை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக இலத்திரணியல் உலகத்தில் இன்றைய இந்த சமூக வலைத்தளங்களிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றவும், அவருடைய கல்வித்துறையில் அவர்கள் முன்னேறவும், உலகத்தை வெற்றி கொள்ளவும் அவர்களுக்கான அதிகமான உளவள ஆலோசனை அவசியம் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.