ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு சர்வதேச ஆதரவு தொடரும்: செவாலியர் ஆர். அருணாசலம் உறுதி!

​ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்வியலில் மிகுந்த கரிசனை கொண்டவரும், சமூகப் பணிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் முனைப்புடன் செயற்பட்டு வருபவரும், IMPA நிறுவனத் தலைவரும், உலகளாவிய சமூக சேவைக்காக செவாலியர் விருது பெற்றவருமான கௌரவ கலாநிதி ஆர். அருணாசலம் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் மருத்துவர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

​சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இக்கலந்துரையாடலில், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வாழ்வாதாரப் பின்னடைவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக, ஈழத்தமிழர்களின் இனவிடுதலைக்கான சாத்தியமான அடுத்தகட்ட வழிவகைகள் குறித்தும், இவ்விவகாரத்தில் சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும் ஆழமான மற்றும் விரிவான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

​உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் துயரங்களிலும் அவர்களது நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்களிலும் எப்போதும் துணை நிற்பார்கள் என்பதை கலாநிதி ஆர். அருணாசலம் உறுதிபடத் தெரிவித்ததோடு, ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கும் சர்வதேச அளவில் தங்களால் இயன்ற அனைத்து ஆதரவுகளும் தொடருமென நம்பிக்கை தெரிவித்தார்.

​இதன்போது, தொழிலதிபர் மருத்துவர் நித்தியானந்தா மற்றும் எம். ஜி. ஆர் மன்றத்தின் தலைவர் எம். ஜி. ஆர் மணி ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறப்புச் செய்திகள்