கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கே. எஸ். ஈஸ்வரப்பா அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் நேரில் (2026/07/04) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டுமாயின், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் காத்திரமான பங்களிப்பும் அழுத்தங்களும் தற்போதைய சூழலில் மிக அவசியமானவை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இங்கு வலியுறுத்தினார். மேலும், இந்திய மத்திய அரசின் தார்மீக ஆதரவே தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரக் கூடிய பிரதான சக்தியாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், தாயகத்தில் ஈழத்தமிழர்கள் தற்போதும் திட்டமிட்ட இன ரீதியான அடக்குமுறைகளையே எதிர்கொண்டு வருகின்றனர் என்றும்; தமிழர்களின் பூர்வீக மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டும் இடிக்கப்பட்டும் வருவதுடன், அவர்களின் கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதற்கான நுணுக்கமான இனவழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு எதிராக சர்வதேச மட்டத்திலும் பிற அரசியல் சக்திகளுடனும் இணைந்து குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இச்சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, எம். ஜி. ஆர் மன்றத்தின் தலைவர் எம். ஜி. ஆர் மணி மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
