’83 படுகொலை முதல் செம்மணி வரை: நாடாளுமன்றத்தை அதிரவைத்த சிறீதரன் எம்.பியின் உரை! (VIDEO)

இன்றைய தினம், 43 வருஷங்களுக்குப் பிறகு, ஆளுகின்ற அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்ற இந்த ஜூலை படுகொலைகள் பற்றிய விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக, 43 ஆண்டுகளுக்கு முதல் இலங்கையிலே மிகக் கொடூரமான, ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை—இந்த நாட்டிலே வெலிக்கடைச் சிறை, களுத்துறை, பிந்துனுவெவ போன்ற பல சிறைகளில் கைதிகள் கொல்லப்பட்டார்கள் . இதுதான் இலங்கையிலே நடந்த முதலாவது இனரீதியான படுகொலை அல்ல .இதற்கு முதல், 1954ஆம் ஆண்டு அல்லை-கந்தளாயிலே 154 தமிழ் விவசாயிகள், பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கச் சிங்களக் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்குப் பிற்பாடு, 1956ஆம் ஆண்டு அனுராதபுரத்திலே கிட்டத்தட்ட 26,000 குடும்பங்கள் ஒரு இரவோடு இரவாகக் கொலை செய்யப்பட்டுத் துரத்தப்பட்டார்கள். 1985ஆம் ஆண்டு வரை அனுராதபுரத்திலே நகரசபையின் தலைவராக ஒரு தமிழர் இருந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது ஒரு தமிழ் பிரதிநிதி கூட இல்லாத அளவுக்குத் தமிழர்களுடைய வரலாறு அங்கு அழிக்கப்பட்டிருக்கிறது  என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்தக் காலத்திலே லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ போன்ற ஐக்கிய தேசியக் கட்சியில் கோலோச்சிய அமைச்சர்கள்—தமிழர்களை, அப்பாவிகளாக இருந்த தமிழர்களைப் பார்த்து, ஆயுதம் தரிக்காத தமிழர்களைப் பார்த்து, ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்று சொன்ன ஜே.ஆர். ஜெயவர்த்தனவினுடைய வழிநடத்தலிலே—மிகக் கொடூரமான கொலைகளை இந்த நாட்டிலே செய்திருந்தார்கள் .பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். பல கோடி பெறுமதியான சொத்துக்கள் இந்த மண்ணிலே அழிக்கப்பட்டன. குட்டிமணி, தங்கத்துரையின் கொலைகள் மட்டுமல்ல—’தமிழீழத்தைப் பார்க்கப் போகிறாயா?’ என்று குட்டிமணியினுடைய கண்கள் கூடத் தோண்டி எடுக்கப்பட்டன.

இந்த அளவு வன்மங்களும் கொடூரங்களும் இந்த மண்ணிலே நடைபெற்று முடிந்தது.ஆகவே, இந்த ’83 படுகொலை என்பது சாதாரணமானது அல்ல. இதற்கு முதலே 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது, ஈழநாடு அலுவலகம் எரிக்கப்பட்டது—இவையெல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன .இன்றைக்கு நீங்கள் இந்த விடயத்தை ஒரு அரச தரப்பாக இந்த நாடாளுமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்ட வேளைப் பிரேரணையாகக் கொண்டுவருகிறீர்கள் . நான் இந்த அரசாங்கத்திடம் கேட்கிறேன்—நீதியமைச்சர் இருக்கிறார்—கொலைகள் தொடர்பான இந்த விடயத்தை ஏன் நீங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, இதற்கான ஒரு ‘சான்சோனி கமிஷன்’ (Sansoni Commission) ஒரு காலத்தில் இருந்தது போல, உங்களால் இதற்கு ஒரு நீதி பெற்றுத் தர முடியுமா?

உங்களது அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. முள்ளிவாய்க்காலிலே நடந்த இனப்படுகொலைக்குக் கூடச் ‘சர்வதேச விசாரணைக்குப் போகக்கூடாது, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று நீங்கள் ஜெனிவாவிலே உங்களுடைய பிரேரணைகளை முன்வைத்திருக்கிறீர்கள் . ஆகவே, இந்த மண்ணிலே நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையான வாகரை படுகொலை, முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் கூட நீதியை வழங்க நீங்கள் தயாராக இல்லை .இன்றும் கூட நாங்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்—கிட்டத்தட்ட செம்மணியிலே 471 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன, 45 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவை தமிழர்களுடையது. இது நேற்றைய திகதி வரைக்கும் கிட்டத்தட்ட ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியை அடையாளம் காட்டியிருக்கிறது .

நான் கேட்கிறேன், தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! 1983ஆம் ஆண்டு 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்காக மலையகத்திலே இருந்த கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அப்பாவி மனிதர்கள்; அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களா கண்ணிவெடி வைத்தார்கள்? ஆனால், அதிலிருந்து ஒரு 13 ஆண்டுகள் கடந்து நீங்கள் பாருங்கள்—1996ஆம் ஆண்டு முல்லைத்தீவிலே ‘ஓயாத அலைகள்’ மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை கைப்பற்றிய பொழுது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் . ஆனால், ஒருவர் கூடத் தமிழர், கொழும்பிலோ அல்லது மலையகத்திலோ கொல்லப்படவில்லை.

காரணம், தமிழர்கள் பலமாக இருக்கும் பொழுது நீங்கள் மிகவும் யோசனையோடு இருந்தீர்கள்; சிங்களம் யோசனையோடு இருந்தது. தமிழர்கள் பலவீனமாக இருந்த பொழுது பல ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றொழித்தார்கள்.அதே ’83ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்த மக்களும் சரி, கொழும்பில் இருந்த மக்களும் சரி, வடபகுதிக்குக் கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள் . அனுப்பப்பட்ட பொழுது, இந்தியாவினுடைய கப்பல்கள் வந்து கொழும்பிலிருந்து மலையகத்திலிருக்கிற தமிழர்களை ஏற்றி, வடக்கில் குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்திலே கொண்டுவந்து இறக்கின.

இவ்வாறு நடந்த பொழுது—ஏன் அந்த காரணத்தை நான் சொல்கிறேன் என்றால்—வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களுடைய தாயகம் என்பதை இந்தியா அந்த நேரமே உணர்த்தியிருந்தது. சர்வதேச சமூகம் இன்றும் ஏற்றுக்கொள்கிறது; வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களுடைய வரலாற்றுவழி, மரபுவழித் தாயகம்—அவர்களுடைய ‘ஹோம்லேண்ட்’ (Homeland).ஆகவே, இந்தச் சபையிலே இருக்கிற நீங்கள் எவ்வளவு கொண்டுவருகிறீர்கள்? நான் கேட்கிறேன், ’87ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வந்த 13ஆம் திருத்தம் மூலம் வடகிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கை வழக்கு போட்டுப் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர் .

அதேபோல, 2004ஆம் ஆண்டு சுனாமி கட்டமைப்பு வந்தபொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சந்திரிகா அரசு இணைந்து அதனைச் செய்ய முனைந்த பொழுது, அதற்கு வழக்கு போட்டு அதனையும் நிறுத்தியவர்கள் ஜே.வி.பியினர்.ஆகவே, உங்களிடமும் குற்றங்கள் இருக்கின்றன. நீங்கள் இப்பொழுது என்ன யோசிக்கப் போகிறீர்கள்? தமிழர்களை நீங்கள் ஒரு சமத்துவம், சமதர்மம் என்று அடக்கப் போகிறீர்களா? அல்லது தயவுசெய்து தமிழர்களை ஒரு இனமாக—அவர்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு என்பது அவர்களுடைய தாய் பூமி—அதற்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை உங்களால் முன்வைக்க முடியுமா? இல்லை, நீங்கள் இப்படித் தமிழர்களை ஏமாற்றுவதற்கான தீர்மானங்களைக் கொண்டுவந்து ஒரு மாற்றுத் திசைக்குக் கொண்டு செல்லப் போகிறீர்களா என்பதைத்தான் நான் இந்த உயர்ந்த சபையின் ஊடாகக் கேட்கிறேன் .ஆகவே, கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, நீதி தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால், அது நீதியானதாக இருக்க வேண்டும் என்றார்.

சிறப்புச் செய்திகள்