​”கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம்” – மாணவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும், கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதனை நிரூபித்து, விடிவை நோக்கிய எமது பயணத்திற்கு புதிய நம்பிக்கையை நாம் கட்டமைக்க வேண்டும்” என கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

​”ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்த மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவரையும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் ஆசீர்வதிக்கின்றேன். இந்த மேடையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி, இந்த வித்துக்கள் உருவான இதே பாடசாலையின் மேனாள் அதிபர் என்ற பாரிய பெருமிதத்தோடும் உரிமையோடுமே நான் உங்களோடு பேசுகின்றேன்.

இந்த வகுப்பறைகளில் எல்லோரும் விதைத்த அர்ப்பணிப்பும், ஆசிரியர்களின் ஓயாத உழைப்பும் இன்று உங்களின் இந்த அரிய வெற்றியின் மூலம் மாபெரும் அறுவடைப் பெருவிழாவாக மாறியிருக்கின்றது.

​அதேவேளை, இதே நாட்கள், எமது தேசத்தின் வரலாற்றில் ஆறாத வடுக்களைச் சுமந்த முள்ளிவாய்க்கால் நினைவு வார நாட்களாகும். இந்த உயரிய மேடையில் நின்று பேசும் போது, இதே பாடசாலையில் கல்வி கற்று, படுபயங்கரமான முறையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் முகம் என் நினைவலைகளில் அழியாச் சித்திரமாய் வந்து போகிறது.
​உங்களைப் போலவே துள்ளிக் குதித்து விளையாடி, கல்வி கற்று, சாதனைகள் பல படைக்க வேண்டிய ஒரு உன்னதமான தமிழ் வித்து, மிகக் கொடூரமாக எமது மண்ணில் கருக வைக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில், நாம் பாலச்சந்திரன் உள்ளிட்ட எமது பிஞ்சுப் பாலகர்களையும், மாண்ட ஒட்டுமொத்த உறவுகளையும் நெஞ்சார நினைவுகூருகின்றோம்.
​அவர்களின் இழப்பிற்கு நாம் செலுத்தக்கூடிய ஆகச்சிறந்த அஞ்சலி என்னவென்றால்—அநீதிகளுக்கு முன்னால் ஒருபோதும் மண்டியிடாமல், கல்வி எனும் பேராயுதத்தை ஏந்தி, இந்த மண்ணின் உரிமைகளுக்காகவும் எமது சமூகத்தின் எழுச்சிக்காகவும் எமது இளைய தலைமுறையை அறிவுள்ள, ஆற்றல்மிக்க சமூகமாக கட்டியெழுப்புவது மட்டுமேயாகும்” எனத் தெரிவித்தார்.

​பாடசாலையின் முதல்வர் திருமதி இளவேந்தி நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் திரு கைலாசபிள்ளை பிரகாஸ், கிளிநொச்சி மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் திரு செல்லத்துரை சரத்சந்தர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக தெற்கு வலய ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திரு பாலையா சிறிஸ்குமார், கிளி/ செல்வாநகர் வித்தியாலய முதல்வர் திரு சிவசம்பு மகேந்திரராஜா, ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி வசந்தமலர் பத்மானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்