”எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதுமே கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டே நகர்ந்திருக்கிறது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நாளைய தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“எத்தனையோ இழப்புகளையும் சவால்களையும் கடந்து வந்துள்ள எமது சமூகம், இன்று நிமிர்ந்து நிற்பதற்கும் நாளை உலக அரங்கில் தலைநிமிர்வதற்கும் உங்களைப் போன்ற மாணவர்களின் கல்வி அறிவே மிக முக்கிய அடித்தளமாகும். நீங்கள் இன்று பெற்றுள்ள இந்த புலமைப்பரிசில் வெற்றி என்பது வெறும் ஏட்டுக் கல்விக்கானது மட்டுமல்ல; இது எமது மண்ணின் எதிர்காலப் பாதுகாப்புக்கும், எமது இனத்தின் அறிவுசார் விடுதலைக்கும் நீங்கள் வைத்துள்ள முதல் படியாகும்.

வரலாற்றில் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், எமது தனித்துவத்தைத் தக்கவைக்கவும் துப்பாக்கிகளை விடவும் பேனா முனைகளுக்கே அதிக வலிமை உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும், நீங்கள் அடையும் ஒவ்வொரு கல்வி உயர்வும் எமது இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு சேர்க்கப்படும் பெரும் பலமாகும். சவால்களுக்கு அஞ்சாது, உங்களது அறிவுத் தேடலைத் தொடர்ந்து முன்னெடுத்து, எமது சமூகத்தை ஒளியுள்ள எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த சபதமேற்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

உருத்திரபுரம் மக்கள் ஒன்றியம் – கனடா, ஏற்பாட்டில் கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை, கிளி/ உருத்திரபுரம் மகா வித்தியாலயம், கிளி/ புனித பற்றிமா றோ.க.த.க பாடசாலை, கிளி/ புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம், கிளி/ கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயம், கிளி/ பரந்தன் அ.த.க பாடசாலை ஆகிய ஆறு பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய, சித்தியடைந்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு அண்மையில் கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை பிரதான மண்டபத்தில் ( 2026/05/23) சிறப்பாக நடைபெற்றது.

கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலையின் முதல்வர் திருமதி சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் மற்றும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் மருத்துவர் திரு சிவஞானசுந்தரம் வாகீசன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக அன்னையின் கரங்கள் அமைப்பின் நிறுவனர் திருமதி அன்னலட்சுமி ஏரம்பு, சிவநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு இராஜேஸ்வரநாதன் திலக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.