“தமிழீழ வைப்பக நகைகள் மற்றும் புனர்வாழ்வு கழக நிதியை தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள்!” – நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய நாள், பணத்தூயதாக்கல் சட்டமூலத்தினுடைய நிறைவேற்றத்தை நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற இந்த நாளிலே, இந்த நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தத்தின் பொழுது தமிழீழ தேசம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி, பொருளாதார, அரசியல் மையப்படுத்தப்பட்ட ஒரு தேசமாக தமிழர்களுடைய நிலப்பகுதிகள் இருந்தது. அந்த காலகட்டங்களில் அவர்களுடைய நிலப்பகுதிகளில் இயங்கிய தமிழீழ வைப்பகத்திலே தமிழர்கள் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருந்தார்கள். இறுதி யுத்தத்தின் பொழுதும் அந்த நகைகள் அடகிலே இருந்த நகைகளை எடுக்கக்கூடியவர்கள் மீள எடுத்திருந்தார்கள். எடுக்காதவர்களுடைய பல கோடி ரூபாக்கள் பெருமதியான கன்டெய்னர் பெட்டிகளில் நகைகளை கோட்டபாய ராஜபக்சவும் அரசாங்கமும் கொண்டு வந்ததாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் கூட பல நேர்முகங்களில் பல தடவைகள் முன்வைத்திருக்கிறார். ‘தானே அந்த தமிழீழ வைப்பகங்களில் இருந்த நகைகளை நான் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறேன், அந்த நகைகளுக்கு என்ன நடந்தது’ என்று அவர்கள் கேள்விகளை கேட்டிருந்தார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கேட்கிறேன் இந்த உயர்ந்த சபையின் ஊடாக, இறுதி யுத்தத்தின் பொழுது தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த நகைகள் தூயதாக்கப்படுவதற்காக உகாண்டாவிலும் மகிந்த குடும்பத்தினால் இப்பொழுதும் பேணி வைத்திருக்கப்படுவதாகவே செய்திகள் வருகின்றன. விடுதலை புலிகளிடமிருந்து அல்லது அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்தவர்கள், ‘கேபி’ என்று சொல்லப்படுகிற குமரன் ஊடாக சொத்துக்களை பறிமுதல் செய்த கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர், அந்த சொத்துக்களை பசில் ராஜபக்ச போன்ற அந்த ராஜபக்ச குடும்பத்தின் பெயரிலே பல நாடுகளில் முதலீடு செய்திருப்பதாகத்தான் நாங்கள் இன்றும் இந்த செய்திகளை பார்க்கிறோம்.

ஆகவே தமிழர்களுடைய, அதிலும் ஏழைகள் தமிழீழ வைப்பகங்களிலே அடகு வைத்த அந்த நகைகளுக்கு என்ன நடந்தது? நான் கேள்வியாகவும் கூட கேட்டிருந்தேன். இதுவரை இந்த அரசாங்கம் பதவிக்கு வர முதல், இந்த அரசாங்க தரப்பிலே சொல்லியிருந்தார்கள் ‘நாங்கள் அந்த நகைகளை மக்களிடம் கொடுக்கிறோம், நாங்கள் அதற்கான வழியை தேடுவோம்’ என்று. ஆனால் இப்பொழுது வேறு ஒரு கதையை சொல்லுகிறார்கள், ‘அது அரசாங்கத்தினுடைய நிதி மூலத்திற்கு மாற்றப்படும்’ என்று.

நான் சென்ற வாரம் கூட என்னிடம் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அம்மா வந்திருந்தார், 50 பவுன் நகைகளை தான் தமிழீழ வைப்பகத்திலே பாதுகாப்பு பெட்டகத்திலே வைத்திருந்தேன், நான் அடவு வைத்திருக்கவில்லை, பாதுகாப்பு பெட்டகத்திலே வைத்திருந்தேன் என்றார். இதனைவிட இதுவரை கிட்டத்தட்ட 816 பேர் என்னிடம் தங்களுடைய விண்ணப்பங்களை தந்திருக்கிறார்கள், ‘தங்களுடைய தமிழீழ வைப்பகத்திலே வைக்கப்பட்ட அடவு நகைகளை மீட்டுத் தாருங்கள்’ என்று. அது இலங்கை அரசாங்கத்தினுடைய படைகள் தானே கொண்டு போயிருக்கின்றன, அதனை அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்பொழுது வந்திருக்கிற அரசாங்கமும் சொல்லியிருக்கிறது ‘நாங்கள் அதனை அந்த மக்களுக்கு வழங்குவோம்’ என்று.

ஆகவே நீங்கள் ஒரு நேர்மையான, கண்ணியமிக்க அரசாங்கம், நீங்கள் இன்று உங்களுடைய பெயரை நல்லதாக்குவதற்காக பல பெயர்களை சொல்லுகிறீர்கள். அப்படியானால் கடந்த அரசாங்கம் கொள்ளையடித்த தமிழ் மக்களுடைய தமிழீழ வைப்பகத்திலே வைக்கப்பட்ட நகையை மீட்டெடுத்து அதை தமிழ் மக்களிடம் வழங்குவதற்கு என்ன தடை இருக்கிறது? ஏன் நீங்கள் அதனை அந்த மக்களிடம் வழங்கக்கூடாது? நீங்கள் எத்தனையோ பேருக்கு விசாரணை நடத்துகிறீர்கள், சுரேஷ் சாலையிலிருந்து பழைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வரைக்கும் நீங்கள் பல பேருக்கான விசாரணைகளை மேற்கொள்கிறீர்கள். இந்த நகைக்கு என்ன நடந்தது?

இது தமிழர்களுடைய நகை என்பதனால் நீங்கள் விசாரணை செய்யாமல் விடப்போகிறீர்களா? அல்லது இங்கும் ஒரு மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது, மிகப்பெரிய ஒரு கரப்ஷன் (Corruption) நடந்திருக்கிறது. அப்படியானால் இந்த நகைகளுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் விடப்போகிறீர்களா? தயவுசெய்து பணத்தை மட்டும் தூயதாக்கல் மட்டுமல்ல, இந்த நடந்துபோன மிகப்பெரிய அநியாயத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய நகைகளை மீளப் பெறுவதற்கு இந்த அரசாங்கம் உடன் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலத்திலே மகிந்த ராஜபக்ச காலத்திலும் சொன்னார்கள் ‘நாங்கள் அந்த நகைகளை வழங்க இருக்கிறோம்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொன்னீர்கள், ஆனால் நீங்களும் இதுவரை எந்தவிதமான முன்முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. உங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பல விடயங்கள் இன்று பறந்து கொண்டிருக்கின்றன. சொல்லப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது.

ஆகவேதான் கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் குறிப்பிடுவது தமிழீழ வைப்பகத்திலே தங்களுடைய விவசாய செய்கைக்காக, பிள்ளைகளுக்காக, குடும்பத்திற்காக அடகு வைத்த அந்த நகைகளை, இன்று எத்தனையோ குமர்ப் பிள்ளைகளை கரை சேர்க்க முடியாமல், தங்களுடைய குடும்பத்துக்குரிய நகைகளை மீட்க முடியாமல் இந்த குடும்பங்கள் பரிதவிக்கின்றன. ஆகவே இது ஒரு கண்ணியத்தோடும் கருணையோடும் அவர்களுடைய நகைகளை அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.

முதலிலே நீங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அரசாங்க அதிபர்களுக்கு ஊடாக, இவ்வாறு தமிழீழ வைப்பகத்திலே நகையை அடகு வைத்தவர்களுடைய பட்டியலை கோருங்கள். எத்தனை ஆயிரம் பேர் இவ்வாறு நகைகளை அடகு வைத்திருக்கிறார்கள், அவர்களிடமிருந்து எவ்வளவு நகைகள் அடகு வைக்கப்பட்டிருக்கிறது, அப்படியானால் இலங்கையிலே எவ்வளவு கோடி ரூபாய் பெருமதியான நகைகளை ராஜபக்ச குடும்பம் கொள்ளையடித்திருக்கிறது என்பதை வெளியிலே கொண்டு வாருங்கள். இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுபோலத்தான் அண்மை நாட்களிலே நீங்கள் பார்த்திருப்பீர்கள், தமிழர் புனர்வாழ்வு கழகத்தினுடைய நிதியையும் அரசாங்கம் முடக்கியது. பல இடங்களிலே தமிழர்களுக்குரிய, ஏழைகளுக்குரிய புனர்வாழ்வு நடவடிக்கைகளை செய்த தமிழர் புனர்வாழ்வு கழகம் முன்பள்ளிகளை நடத்தியது, பல பாடசாலைகளுக்கான உதவிகளை செய்தது, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்கியது. இவ்வாறான தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு இலங்கையினுடைய சட்ட ரீதியான வங்கிகளில் கணக்கிலக்கங்கள் இருந்தன. அதிலே வைப்புக்கள் இருந்தது, நிலையான வைப்புக்கள் (Fixed Deposits) இருந்தது.

நான் பலமுறை இந்த உயர்ந்த சபையின் ஊடாக கேட்டிருக்கிறேன். ஆகவே தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாகவும் கொண்டுவரப்பட்ட நிதி உங்களால் முடக்கப்பட்டிருக்கிறது, கடந்த அரசாங்கங்களால் முடக்கப்பட்டிருக்கிறது. ஆக முடக்கப்பட்ட அந்த நிதியை உரியவர்களிடம் வழங்குங்கள், தமிழர்களிடம் வழங்குங்கள். அவர்களுக்குரிய நிதியாக அதனை மாற்றிடு செய்யுங்கள், நீங்கள் அதனை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக திருப்பி விடுங்கள். தமிழர் புனர்வாழ்வு கழகத்தினுடைய நிதியை இந்த அரசாங்கம் எப்படி கொள்ளையடிக்க முடியும்? ஒரு அரசாங்கத்தினுடைய வங்கியிலே சட்ட ரீதியாக தங்களுடைய வரைவுகளை, ஆய்வுரிமை வரம்புகளை, யாப்புகளை கொடுத்து தங்களுடைய நிறுவனம் சார்ந்து வைக்கப்பட்டிருந்த வைப்புகளை அரசாங்கம் பகல் கொள்ளையடித்திருக்கிறது. கடந்த அரசாங்கங்கள் அடித்த அந்த பகல் கொள்ளையை மீட்டெடுத்து நீங்கள் அந்த மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஆகவே நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர்கள், இது உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் நினைக்கிறேன் கடந்த காலங்களிலே சிறைச்சாலைகளிலே தமிழர்கள் கொல்லப்படுகிற பொழுது…”

நான் கேட்பது, இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய உணர்வுகளை… வைப்பகத்திலே வைக்கப்பட்ட நகையை, அவர்கள் தமிழர் புனர்வாழ்வு கழகத்திலே செய்த உதவிகளை வெளியிலே கொண்டு வாருங்கள். அவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். சொந்த நிலங்களுக்குப் போக முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். இன்றைக்கும் அவர்கள் தெருக்களிலே போராடுகிறார்கள், நாங்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்.

வடமராட்சி கிழக்கிலே தமிழருடைய காணிகளை ராணுவத்துக்கு அளக்கிறீர்கள். நீங்கள் இன்றைக்கு மயிலட்டி மக்கள் போராடுகிறார்கள், பலாலி மக்கள் போராடுகிறார்கள், கேப்பாபுலவு மக்கள் போராடுகிறார்கள். அப்படி என்றால் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்ன நியாயம்? உங்களுடைய அரசாங்கம் வந்தும் கூட நீங்களும் ஏன் இதுவரை இன்னும் ஒரு நியாயமான சரியான முடிவை எடுக்க முடியாமல் நீங்கள் தள்ளாடுகிறீர்கள்?

தயவுசெய்து மக்களுடைய பிரச்சனைகளை திசைதிருப்ப, இந்த நாட்டிலே வாழுகின்ற மக்களுடைய இன்னல்களை மாற்ற வேறு திசைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம். அதற்கான நியாயமான வெளிப்பாட்டை கொண்டு வாருங்கள். இந்த மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், நல்லெண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுடைய நகைகளை ஒப்படையுங்கள், புனர்வாழ்வு கழகத்தின் நிதியை மீளுங்கள். இதுதான் இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய தார்மீக கடமையாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன் என்றார்.

சிறப்புச் செய்திகள்