​இந்தியத் துணை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு: கூட்டாட்சித் தீர்வும் மீனவர் பிரச்சினை குறித்தும் வலியுறுத்தல்!

​இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள, தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தியத் துணை ஜனாதிபதியைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துத் தீர்க்கமான கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

இதன் போது பல்வேறு முக்கிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

​குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வன்னி நோக்கி மேற்கொண்ட பயணம் மற்றும் அது தொடர்பாக இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட 180 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கை குறித்து நினைவு கூர்ந்தார். அந்த அறிக்கையின் விளைவாகவே, இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் 50,000 வீட்டுத்திட்டம் உடனடியாக வழங்கப்பட்டது என்பதையும் அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

​தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் ஈழத் தமிழர்களுக்குச் சமஷ்டி (கூட்டாட்சி) முறையிலான அரசியல் தீர்வே அடிப்படைத் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், 2015-இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், தனது அனுபவத்தின் அடிப்படையில் இலங்கைக்கு ஒரு ‘கூட்டாட்சி முறைமை’ தான் பொருத்தமானது எனக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். தற்போதைய 13-வது திருத்தச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் கூட நீதிமன்றங்கள் ஊடாகப் பறிக்கப்படுவதால், ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் நேரடித் தலையீடு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

​மேலும், இந்தியப் படகுகளின் அத்துமீறல்களால் வடக்கு – கிழக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்ததோடு, யுத்தத்தால் ஏற்கனவே சிதைந்துள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒரு நிரந்தரத் திட்டம் வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த துணை ஜனாதிபதி, இந்தியக் கடற்றொழில் அமைச்சருடன் ஆலோசித்து இது குறித்துத் தகுந்த முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

​தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 102 முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் தாயகம் திரும்ப விரும்புவோருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், அவர்கள் மீண்டும் குடியேறும்போது எதிர்கொள்ளும் நிலச் சிக்கல்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஈழத்தில் தமிழர்களின் இனப்பரப்பைத் தக்கவைக்க அவர்கள் மீளவும் இலங்கைக்குத் திரும்புவதே அவசியம் என்பதில் துணை ஜனாதிபதியும் தனது நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்தார்.

​ஈழத் தமிழர்களின் சமகால அரசியல் போராட்டங்கள் மற்றும் வாழ்வாதாரச் சவால்களை இந்திய உயர்மட்டத் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்ற முக்கிய நிகழ்வாக இந்தச் சந்திப்பு அமைந்தது.

இக்கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்