இன்றைய தினம் வலுசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தின் பொழுது, மிக முக்கியமாக நாட்டிலே இயற்கையின் வழியிலே நீங்கள் மின்சாரங்களைப் பெறுவதும், ஏற்கனவே இருக்கின்ற நீர் மின்சாரத்தின் ஊடாகவும் நாட்டினுடைய மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருந்தாலும் இப்பொழுதும் கூட சில இடங்களில் இயந்திரங்கள் மூலமாக மின்சாரம் வழங்குகின்ற செயல் திட்டங்கள் நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, இயற்கை ரீதியாகக் கிடைக்கின்ற மின்சாரத்தினுடைய தாக்கமும் தரவுகளும் குறைவு என்பதையும் நாங்கள் இந்த இடத்திலே புரிந்து கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (26 ) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனை விட சோலார், வின்பவர் (wind power) மூலமாக, காற்றாலைகள் மூலமாக நாட்டிலே மின்சாரத்தை சேகரிப்பதற்கான பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த செயல் திட்டங்களில் அண்மையிலே மன்னார் மாவட்டத்தில் அதுதொடர்பிலே மிகப்பெரிய அளவான விமர்சனங்கள், மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்திருந்தது. அது ஜனாதிபதி வரைக்கும் சென்று ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இப்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தினுடைய கிராஞ்சி கிராமத்திலே—கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பகுதி ஒரு கிளிநொச்சியினுடைய மேற்குப் பகுதியிலே தனியான ஒரு தீவுப் பகுதி போல காட்சி அளிக்கின்ற இடம். மழை பெய்து வெள்ளம் வந்தால் அந்த இடங்களுக்குப் போக்குவரத்து செய்ய முடியாது; அவ்வளவுக்குப் போக்குவரத்துப் பாதைகள் கூட இல்லை. அவ்வாறான அந்த கிராஞ்சி என்பது முழுக்க முழுக்க தென்னந்தோட்டங்களுக்கு மிக பெறுமதி வாய்ந்த ஒரு இடம். மக்கள் அந்த காலத்திலே குடியேறி, இன்றுவரை பல தென்னந்தோப்புக்களை உருவாக்கி அந்த இடத்திலே குடிவாழ்ந்து வருகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி மண்ணினுடைய ஒரு தனியான கிராம அலுவலர் பிரிவு கிராஞ்சி.
இந்த கிராஞ்சியினுடைய கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பகுதிகள், கிராஞ்சியினுடைய தெற்குப் பகுதியாக இருக்கின்ற பிரதேசங்களில் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைப் பெறுவதற்காக அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற அடிப்படையில், அங்கிருக்கின்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் இவ்வளவு காலமும் நட்டு உருவாக்கி பயன்பெறுகின்ற இந்த நேரத்திலே,பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுடைய தென்னம்பிள்ளைகள் அழிக்கப்படுகின்றன. ஏன் அந்த தென்னம்பிள்ளைகளை அழித்துதான் அந்த காற்றாலைகளை உருவாக்க வேண்டுமா?
அந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தார்கள். பல கடிதங்களை ஜனாதிபதிக்கு எழுதியிருக்கிறார்கள், அரசாங்க அதிபருக்கு எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கான ஒரு நல்ல செய்தி இந்த அரசாங்கத்தினால் கொடுக்கப்படவில்லை என்பதுதான் துரதிஷ்டவசமானது.
ஆகவே, கிராஞ்சி பகுதி மக்களுடைய உண்மையான கோரிக்கையை, அந்த கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு பகுதிகளிலே வாழுகின்ற மக்களுடைய, குறிப்பாக கிராஞ்சி பகுதி கிராமத்தினுடைய மக்களுடைய கோரிக்கையை அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். அவற்றுக்கான அந்த இடங்களில் காற்றாலைகளை அமைப்பதை விட இன்னும் பல திறந்த வழிகள், தரிசு நிலங்கள் அங்கே உண்டு, அந்தப் பகுதிகளில் உண்டு. அவ்வாறான பிரதேசங்களைத் தெரிவு செய்து காற்றாலைகளை அமைப்பதற்கு அவர்கள் எதிர்ப்பல்ல.
ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரமாக நீண்ட நெடுங்காலமாக அவர்கள் தங்களுடைய உடல் உழைப்பால் உருவாக்கிய தென்னந்தோட்டங்களை அழித்து, அந்த இடங்களிலே நீங்கள் காற்றாலைகளை அமைக்க முனைவதும், அதனூடாக மின்சாரம் எடுக்க முனைவதும், பல குடும்பங்களை அதிலே இருந்து இடம்பெயரப் பண்ணுவதும் மிகவும் மோசமானது. அது மனித குலத்துக்கு ஏற்படுத்தப்படுகின்ற மிகப்பெரிய குந்தகம்.
ஆகவே, நான் நினைக்கிறேன் வலுசக்தி அமைச்சரும் இங்கே இருக்கின்ற காரணத்தினால் இந்த விடயத்தைக் கருத்திலே எடுங்கள். இன்றைய நாள் அதற்கு மிக பொருத்தமான ஒரு நாளும் கூட. கிராஞ்சியிலே கொண்டுவரப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார நிகழ்வை உடனடியாக அந்தத் திட்டத்தை நிறுத்தி, அதனை வேறு ஒரு பிரதேசத்திற்கு தரிசு நிலங்கள் அல்லது காற்று வரக்கூடிய வேறு வழிகளுக்கு மாற்றுமாறு நான் விநயமாக இந்த இடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.
அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தினுடைய விவசாயிகள், மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய விவசாயிகள் அண்மைக் காலங்களிலே, கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, அவர்கள் சில போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். குறிப்பாக ஒரு ஏக்கர் நிலத்திலே அவர்கள் நெல் உற்பத்தி செய்வதற்கு: நிலம் பண்படுத்துதல், விதைநெல் 70 கிலோ, களைநாசினிகள் இரண்டு தடவை, இரசாயன உரங்கள் நாலு தடவை, பூச்சி நாசினிகள் இரண்டு தடவை, வாய்க்கால் வரம்பு மற்றும் வயல் துப்புரவு ஆள்கூலி, விதைப்பு மற்றும் உரமிடல் ஆள்கூலி, ஐந்து தடவை நாசினிகள் விசிறிய ஆள்கூலி, நாலு தடவை வரிப்பணங்கள், அறுவடை இயந்திரக் கூலி, அறுவடை ஆள்கூலி, பொதியிடல், நெல் அறுவடை ஏற்றிய வாகனக் கூலி, நீர்ப்பாச்சல் ஆள்கூலி, நெல் உலர்த்தல், வயல் குத்தகை, மூலதன வட்டி, வங்கி மற்றும் வர்த்தக நிலையங்கள் சகல கூலியாள் உபசரணை உட்பட மொத்தமாக ஒரு ஏக்கருக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்திக்கு அவ்வாறு செலவாகிறது. ஆனால், ஒரு ஏக்கருக்கு அவர்கள் அறுவடை செய்வதோ 1750 கிலோகிராம். அதை 120 ரூபாய் படி 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்குத் தான் அவர்கள் விற்கக்கூடியதாக இருக்கிறது.
ஆகவே தலைமை தாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே, விவசாயிகளுடைய முதுகெலும்பான நெல் உற்பத்தியில் ஒரு கிலோகிராம் நெல் உற்பத்தி செய்ய 121.50 ரூபாய் செலவாகின்றது. தற்போது ஒரு கிலோகிராம் நெல்லைக் கொள்வனவு விலையிலே எடுப்பதற்கு அரசாங்கம் 120 ரூபாய் விதித்திருக்கிறது. எனவே, 1 கிலோ நெல்லை 135 ரூபாய் உத்தரவாத விலையாக அரசு நிர்ணயித்துத் தர வேண்டுமென இந்த விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கிறார்கள்.
அதேபோல, 2026 சிறுபோக நெல் அறுவடை இன்னும் இரு வாரங்களில் ஆரம்பமாக உள்ளதால், நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவு செய்ய அரசு ஆவணம் செய்ய வேண்டுகிறோம். கிளிநொச்சியில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியங்கள் நிரம்பிய நிலையில் உள்ளதால், சிறுபோக நெல் கொள்வனவுக்கு வசதியாகக் களஞ்சியங்களை வெற்றாக்க அரசு ஆவணம் செய்ய வேண்டுகிறோம். தனியார் நெல் விலையை வீழ்ச்சியடையச் செய்யும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்த உடனுரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம் என சுகந்தன் தலைவர் உட்பட அதிலே இருக்கின்ற பல உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த கடிதத்தை நான் சபாபீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.
என் கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இந்த கௌரவ அமைச்சர் நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள். இந்த நாட்டினுடைய மிகப்பெரிய முதுகெலும்பு விவசாயம். இந்த விவசாயத்தினுடைய நடவடிக்கைகளைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இங்கே பிரதம அமைச்சர் அவர்களும் இருக்கின்ற இந்தச் சூழலில் நீங்கள் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்; இந்த நாடு பொருளாதாரத்திலே பின்னுக்குச் செல்கிறது என்று சொல்கிறோம். இப்பொழுதும் வெளிநாட்டுக் கடன்களை நம்பி நீங்கள் இருக்கிறீர்கள். வெளிநாட்டுக் கடன் இல்லாவிட்டால் இலங்கை வாழ முடியாது.
பெருந்தோட்ட உற்பத்தி விழுந்து போய்க்கொண்டிருக்கிறது, நெல் உற்பத்திகள் இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கான சரியான உத்தரவாத விலை வழங்கப்படுவதில்லை. அதேபோல, யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற வெங்காயமோ அல்லது ஏனைய மரக்கறிகள் உற்பத்தி நடைபெறுகிற பொழுது நீங்கள் இறக்குமதியைச் செய்கின்றீர்கள். நெல் உற்பத்தி அறுவடை செய்யப்படுகிற பொழுது அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. இவையெல்லாம் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான பலவீனத்தைத் தருகின்றது.
ஆகவே தயவுசெய்து இந்த நாட்டினுடைய பொருளாதாரம் வளர வேண்டும், ஆகவே, இதனை நீங்கள் தயவுசெய்து கருத்திலே எடுங்கள். விவசாயிகளுடைய உற்பத்தியிலும், விவசாயிகளுடைய பொருளாதார பலத்திலும் அதிகமான கரிசனை கொள்ளுமாறு இந்த உயர்ந்த சபையின் ஊடாக நான் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.