பெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இந்தியா பயணமாகியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 5-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள 7-வது உலகத் திருக்குறள் மாநாட்டில், இலங்கைத் தமிழரசுச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

பெங்களூரு லால்பாக் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் (St. Joseph’s University) இந்த மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், கர்நாடக தாய்மொழி கூட்டமைப்பு மற்றும் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளன. கடந்த காலங்களில் முறையே கன்னியாகுமரி, லண்டன், ஆஸ்திரேலியா, டெல்லி, அமெரிக்கா, கம்போடியா ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 7-வது மாநாடு பெங்களூரில் நடத்தப்படுகிறது.
தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில், உலகளாவிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் இணைந்து முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.
அவர்களுள், ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்று, திருக்குறளின் உலகளாவிய வாழ்வியல் நெறிகள் மற்றும் சமகாலப் பொருத்தம் குறித்து தனது சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
மேலும், இஸ்ரோ (ISRO) முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.



