ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன. தமிழரின் விடுதலைப் பயணம் என்பது வெறும் களப்போராட்டம் மட்டுமல்ல, அது ஒரு கருத்தியல் போர். அந்தப் போரில் நமது வலிகளையும், தியாகங்களையும், நீதிக்கான தாகத்தையும் உலகிற்கு உரக்கச் சொல்லும் வலிமை எழுத்திற்கு உண்டு” எனப் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

​புதுக்குடியிருப்பு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல; அது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்காத அடையாளத்தைக் கொண்ட “இதய நகரம்”. இத்தகைய வீரமும் தியாகமும் செறிந்த மண்ணில், இந்த நூல் வெளியீடு காண்பது மிகவும் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்.

​குறிப்பாக, சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில், மரணத்தின் நிழல் சூழ்ந்திருந்த வேளையில், இந்தப் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயம் தனது கருணைச் சிறகுகளை விரித்து பல்லாயிரம் மக்களின் உயிர்களைக் காத்து நின்ற அந்தப் புனிதமான நாட்களை நான் இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அன்று அந்த ஆலயம் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி, எமது மக்களின் உயிரைப் பாதுகாத்த ஒரு பெரும் புகலிடமாகத் திகழ்ந்தது.

​இத்தகைய மகத்தான வரலாற்றைக் கொண்ட இந்த மண்ணில், அருட்தந்தை அவர்கள் ‘தேவதைகளின் விரல்கள்’ என்று எதைப் பற்றி எழுதியிருப்பார் என்ற ஆர்வம் என்னுள் மேலோங்கி நிற்கிறது. தேவதைகள் என்பவர்கள் வானில் இருப்பவர்கள் மட்டுமல்ல; இக்கட்டான சூழல்களில் எமது காயங்களுக்கு மருந்திட்டு, கண்ணீரைத் துடைக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரர்களும் தேவதைகளே. அத்தகைய புனிதமான உணர்வுகளை அருட்தந்தை அஜந்தன் அடிகளார் அவர்கள் தனது எழுத்துக்களின் வழியே செதுக்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்த மண்ணின் ஆன்மாவோடும், மக்களின் உணர்வுகளோடும் பின்னிப் பிணைந்த ஒரு படைப்பை, போராட்டத்தின் சாட்சியமாக விளங்கும் இந்தப் புதுக்குடியிருப்பில் வெளியிடுவது இந்த நூலுக்குக் கிடைத்துள்ள பெரும் கௌரவமாகும்” எனத் தெரிவித்தார்.

​அருட்தந்தை சிந்தாத்துரைதாஸ் அஜந்தன் அடிகளார் எழுதிய “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீடானது நேற்று முன்தினம் புதுக்குடியிருப்புப் புனித சூசையப்பர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

​நூலின் அறிமுக உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும், நூலுக்கான ஆய்வுரையினைத் திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் திருவாளர் ஜோசப் ஜோன்சன் ராஜ்குமார் அவர்களும் நிகழ்த்தினர்.

​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்